

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி 3,315 கோடி டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 3,128 கோடி டாலராக இருந்தது என்று மாநிலங்களவையில் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
இதேபோல அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி 2,335 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 2,149 கோடி டாலராக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 25 சதவீத அளவுக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். விலை ஸ்திர நிதிய திட்டம் (பிஎஸ்எப்எஸ்) ஆரம்பிப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
காபி உற்பத்தி சரிவு
நடப்பாண்டில் காபி உற்பத்தி பெருமழை காரணமாக சரிந்துள்ள தாக மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் கூறினார்.
நடப்பாண்டில் 3,47,000 டன்னாக இருக்கும் என்று தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடும் வறட்சி, அதிக மழை காரணமாக காபி பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து மதிப்பீடு செய்வதாகவும் அவர் கூறினார். உற்பத்தி குறைவு காரணமாக ஏற்றுமதி அளவும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொருள் குவிப்பு தடுப்பு நடவடிக்கை
அளவுக்கு அதிகமாக இறக்குமதி மூலம் பிற நாட்டு பொருள்கள் குவிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்டம் மூலம் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக நாச்சியப்பன் தெரிவித்தார்.
எலெக்ட்ரிகல் இன்சுலேட்டர், கால்குலேட்டர், யுஎஸ்பி பிளாஷ் டிரைவ் ஆகியன பெருமளவில குவிக்கப்பட்டுள்ளன. பிற நாட்டு பொருள் குவிப்பு தடுப்பு மற்றும் அவற்றுக்கான வரி விதிக்கும் துறை (டிஜிஏடி) அளித்த பரிந்துரையின்பேரில் 11 பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டுத் தொழில்களைக் காப்பதற்காக, பிற நாடுகள் அதிக அளவில் பொருள்களைக் குவிப்பதைத் தடுப்பதற்காக, அத்தகைய பொருள்கள் மீது பெருமளவு சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதையும் மீறி பொருள் குவிக்கப்பட்டால், அவ்வித நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
2.5 லட்சம் நலிவடைந்த தொழில் நிறுவனங்கள்
நாட்டில் 2.5 லட்சம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் நலிவடைந்து விட்டதாக மக்களவையில் தெரி விக்கப்பட்டது. மார்ச் மாத கணக்கெடுப்பின்படி மொத்தம் 2,48,890 நிறுவனங்கள் நலிவடைந்து விட்டதாக மத்திய சிறு, குறுந் தொழில்துறை இணையமைச்சர் கே.ஹெச். முனியப்பா தெரி வித்தார்.
சிறு, நடுத்தர மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் அளவு ரூ. 8,55,658 கோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.