அன்னியச் செலாவணி சந்தை - என்றால் என்ன?

அன்னியச் செலாவணி சந்தை  - என்றால் என்ன?
Updated on
1 min read

ஒரு நாட்டின் பணத்தை வேறு ஒரு நாட்டின் பண அளவில் குறிப்பிடுவது அன்னிய செலாவணி மாற்று விகிதம் என்பதை நேற்று பார்த்தோம். உதாரணமாக ரூ. 65 = $1 என்றும் அல்லது ரூ .1.= 1.15 சென்ட் என்றும் மாற்று விகிதத்தை குறிப்பிடலாம். அன்னியச் செலாவணி சந்தையில் ஒரு டாலரை வாங்கும்போது ஒரு விலையும் (இதனை Bid என்பர்) அதே போல் விற்கும் போது ஒரு விலையும் (இதனை Offer என்பர்) குறிப்பிடுவர். ஒரு டாலரை ரூ. 65-க்கு வாங்கவும், ரூ 65.20 விற்கவும் செய்வதாக குறிப்பிடலாம். இந்த இரண்டுக்கும் உள்ள இடைவெளி 20 பைசா என்பது spread என்பர். இந்த spread தான் அன்னியச் செலாவணி சந்தையில் வியாபாரிக்கு ஏற்படும் லாபம். இந்த spread வியாபாரிக்கு வியாபாரி மாறும். ஒரு நாட்டின் பணம் அடிக்கடி பெரிய அளவில் தொடர்ந்து வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருக்குமேயானால், அதில் spread குறைவாக இருக்கும். ஒரு நாட்டின் பணம் எப்போதாவது சிறிய அளவில் வாங்கப்பட்டு விற்கப்பட்டால் அதில் spread அதிகமாக இருக்கும்.

ஒரு நாட்டின் அன்னியச் செலாவணி சந்தையில் நான்கு வகை நபர்கள் உண்டு, ஒன்று, அன்னியச் செலாவணியை வாங்கவும் விற்கவும் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள், இரண்டு, இவர்களுக்காக அந்நியசெலாவணியை வாங்கும் விருக்கும் வங்கிகள், மூன்று, அன்னியச் செலாவணி முகவர்கள், நான்கு, அந்நாட்டின் மத்திய வங்கி.

யாருக்கெல்லாம் அன்னியச் செலாவணி தேவை? இறக்குமதி செய்வோர், வெளிநாட்டில் முதலீடு செய்வோர், வெளிநாட்டில் பயணம் செய்வோர், இப்படி பலர். யாரெல்லாம் அன்னியச் செலாவணி விற்பார்கள்? ஏற்றுமதி செய்வோர், அன்னிய முதலீடு பெற்றவர்கள், நம் நாட்டில் பயணம் செய்யும் அன்னிய நாட்டினர். இவர்கள் தங்களின் தேவையை வங்கிகளிடம் தெரிவிக்க அவை அன்னியச் செலாவணியை வாங்கவும் விற்கவும் செய்வர்.

பொதுவாக வங்கிகள் தங்களுக்கிடையே இந்த பரிவர்த்தனையை செய்துகொள்ளமுடியும். ஆனால் அவர்கள் அன்னியச் செலாவணி முகவர்களை நாடுவர், ஏன்னெனில், அவர்களுக்கு எல்லா வங்கிகளில் உள்ள அன்னியச் செலாவணிகளின் அளவுகளும், அவற்றின் விலைகளும் தெரியும். அதே போல் அன்னியச் செலாவணி மாற்று விகிதத்தை நிலைப்படுத்த, மத்திய வங்கியும் அன்னியச் செலாவணி சந்தையில் பல நாடுகளின் பணங்களை வங்கி விற்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in