

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம் சீனாவில் 1,400 கோடி டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 5 புதிய ஆலைகளைத் தொடங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 50 லட்சம் கார்களை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சீனாவுக்கென 9 புதிய மாடல் கார்களையும் 51 மேம்படுத்தப்பட்ட மாடல் கார்களையும் அறிமுகப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா தெரிவித்தார். நிறுவனத்தின் மிகவும் பிரபல மான கெடிலாக் மாடலில் புதிய தயாரிப்புகளையும் சந்தைப் படுத்த உள்ளதாக அவர் கூறினார். சீனாவில் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்புகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. பிற நிறுவனத் தயாரிப்புகளோடு ஒப்பிடுகையில் ஜெனரல் மோட்டார்ஸ் கார்களின் விற்பனை சீனாவில் அதிகமாக உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை சீனாவில் முதலில் தொடங்கியது தங்கள் நிறுவனம்தான் எனக் குறிப்பிட்ட பாரா, இதன் மூலம் சீன சாலைகளுக்கு ஏற்ற வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவில் செயல்படுவதால் அதன் கூட்டாளியான 2 வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இயங்கு கின்றன. 10 கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் 31 லட்சம் வாகனங்களை சீனாவில் விற்பனை செய்துள்ளன. ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கான மொபைல் பிராட்பேண்ட் இணைப்பு வசதி, நெடுஞ்சாலைகளில் கைகளை எடுத்துவிட்டு ஓட்டும் வசதி உள்ளிட்ட சிறப்பம்சங்களோடு வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
ஜெனரல் மோட்டார்ஸ் கார்களில் செல்பவர்களுக்கு தொலைத் தொடர்பு இணைப்பு கிடைக்காது என்ற நிலையே இல்லாத வகையில் வாகனங்களைத் தயாரித்து வருவதாக பாரா கூறினர்.