

இயற்கை வேளாண் சாகுபடி குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக வேம்பு கலந்த பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.100 கோடி மதிப்பிலான வேம்பு கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் அதிகம் என்று ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி (எக்ஸிம்) தெரிவிக்கிறது.
பயிர் சாகுபடியில் அஸாடிராக்டின் எனும் வேம்பு கலந்த பூச்சிக் கொல்லியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த பூச்சிக் கொல்லியானது வேப்பங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படுவதாகும்.
சர்வதேச அளவில் இயற்கை விவசாய அளவு 15.8 சதவீதம் அதிகரிக்கும் என எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் வேம்பு கலந்த பூச்சிக் கொல்லிகளுக்கான சந்தை வாய்ப்பு 2011-ம் ஆண்டில் 320 கோடி டாலராக இருந்தது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேம்பு கலந்த பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசாயன பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இயற்கை சார்ந்த விவசாயம் மட்டுமே அங்கு ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் உரங்கள் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களையே மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.
2012-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான வேம்பு கலந்தபூச்சிக் கொல்லிகளின் மதிப்பு 57 கோடி டாலராகும். இதில் வேப்பங்கொட்டை அளவு 2.79 சதவீதமாகும். இந்தியாவிலிருந்து வேம்பு சார்ந்த பொருள்களை இறக்குமதி செய்வதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகியன முதலிரண்டு இடங்களில் உள்ளன..
வேம்பு பிண்ணாக்கை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக ஜப்பான் திகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 2 கோடி டாலர் அளவுக்கு வேம்பு பிண்ணாக்கை ஜப்பான் இறக்குமதி செய்துள்ளது.