600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஸ்நாப்டீல் திட்டம்

600  ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஸ்நாப்டீல் திட்டம்
Updated on
2 min read

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல் அடுத்த சில நாட்களில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பேமெண்ட் செயல்பாடுகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 600 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஸ்நாப்டீல் நிறுவனத்தில் நேரடி யாகவும் மறைமுகமாகவும், பொருட்களை வாடிக்கையாளர் களுக்கு கொண்டு சேர்க்கும் பிரி வில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்ற னர். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த வாரத்திலிருந்து ஆட் குறைப்பு பணியை தொடங்கியுள் ளது. ஸ்நாப்டீல் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வெல்கான் மற்றும் பிரீசார்ஜ் ஆகிய நிறுவனங்களிலிருந்து அடுத்த சில நாள்களில் 500 முதல் 600 பணியாளர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து நிலைகளிலும் உள்ள பணியாளர்களை பணி நீக்கம் செய்யலாம் என்றும் இந்த பணிநீக்க நடைமுறைகள் அடுத்த சில தினங்களில் நிறைவடையலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஸ்நாப்டீல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ``அடுத்த இரு வருடங்களில் எங்கள் நிறுவனத்தை இந்தியாவின் முதல் லாபத்தில் இயங்கும் இ-காமர்ஸ் நிறுவனமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு பயணித்து வருகிறோம். இதை அடைய வேண்டுமென்றால் எங்களது அனைத்து தொழில்களிலும் அதிக அளவு திறன்களை தொடரவேண்டியது மிக முக்கியம். இந்த இலக்கை அடைவதற்காக எங்களது பணியாளர்கள், முக்கிய குழுக்கள் ஆகியவற்றில் சிறிது மாற்றம் செய்ய இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்நாப்டீல் நிறுவனம் புதிய முதலீடுகளை திரட்டமுடியாமல் தவித்து வருகிறது. மேலும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும் செயல்பாடுகளை அதிகரிக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்து கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருமானம் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.

சம்பளத்தை குறைத்துக் கொண்ட நிறுவனர்கள்

ஸ்நாப்டீல் நிறுவனம் பல்வேறு நிதிச் சிக்கல்களை சந்தித்து வருவதையொட்டி இந்நிறுவனத்தின் நிறுவனர்களான குனால் பாஹ்ல் மற்றும் ரோஹித் பன்சால் ஆகிய இருவரும் தங்களது சம்பளத்தை 100 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் ஸ்நாப்டீல் பணியாளர் களுக்கு இ-மெயில் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.``நம்முடைய தொழிலை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லவேண்டும். மேலும் புதிய திட்டங்களையும் கொண்டுவரவேண்டும். லாபத்தை பெறும் நிறுவனமாக ஸ்நாப்டீலை மாற்ற வேண்டும். தற்போது இருப் பதை விட நம்முடைய திறமையை அதிகப்படுத்த வேண்டும்’’ என்று அந்த இ-மெயிலில் கூறப்பட் டுள்ளது.

பிரீசார்ஜ் சிஇஓ கோவிந்த் ராஜன் ராஜினாமா

ஸ்நாப்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிரீசார்ஜ் நிறுவனத்தின் சிஇஓ கோவிந்த் ராஜன் ராஜினாமா செய்துள்ளார்.

2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவிந்த் ராஜன் பிரீசார்ஜ் நிறு வனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக பணிக்குச் சேர்ந்தவர். பின்பு கடந்த வருடம் மே மாதம் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றவர். தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதை ஸ்நாப்டீல் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து ஸ்நாப்டீல் நிறு வனத்தின் இணைநிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான குனால் பாஹ்ல் கூறுகையில் `` பிரீசார்ஜ் நிறுவனத்தின் வளர்ச்சி பெறுவதற்கு கோவிந்த் ராஜன் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அவரது தலைமையில் கீழ் இருந்த குழு அதே வளர்ச்சியை தொடரும் என நம்புகிறேன். கோவிந்த் ராஜன் அடுத்து எதை தேர்ந்தெடுக்க உள்ளரோ அதிலும் இதே போல் சிறப்பான பணியைத் தொடருவார் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். அடுத்து கோவிந்த் ராஜன் எங்கு பணிபுரிய இருக்கிறார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in