Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

நிரந்தர வருமானத்திற்கு…

சென்றவாரம் வங்கி டெபாஸிட்டுகள் குறித்துப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து நிரந்தர வருமானம் தரக்கூடிய (மிகக் குறைந்த ரிஸ்க் உடைய) உபகரணங்களில் என்.சி.டி-யும் (NCD – NON CONVERTIBLE DEBENTURE) ஒன்றாகும். நிறுவனங்கள் தங்களுக்கு நிதி தேவைப்படும் பொழுது என்.சி.டி-க்கள் மூலம் பணம் திரட்டுகின்றன. இது ஒரு கடன் சார்ந்த உபகரணமாகும்.

நிறுவனத்தைப் பொறுத்து ஒன்றிலிருந்து எண்ணற்ற ஆண்டுகளுக்கு இந்த உபகரணம் மூலம் நிதி திரட்டுகின்றன. பொதுவாக மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் கெடு உள்ள வெளியீடுகள் அதிகமாக வருகின்றன. சில நிறுவனங்கள் ஓரிரு ஆண்டுகளுக்கும் இந்த டிபஞ்சர்களை வெளியிடுகின்றன. எல்லா நிறுவனங்களும் டீபாஃல்ட்டாக (DEFAULT) ஆக வெளிநாடுவாழ் இந்தியர்களிட மிருந்து முதலீட்டை பெற்றுக் கொள்வது இல்லை. சில நிறுவனங்கள் என்.ஆர்.ஐ முதலீட்டை வேண்டாம் என கூறிவிடுகின்றன. சில நிறுவனங்கள் என்.ஆர்.ஐ-களிடமிருந்து, என்.ஆர்.ஓ பணங்களை மட்டும் பெற்றுக் கொள்கின்றன.

என்.ஆர்.ஈ பணங்களை பொதுவாக நிறுவனங்கள் பெற்றுக் கொள்வது இல்லை.

ஏன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த உபகரணங்களில் முதலீடு செய்ய வேண்டும்? என்.சி.டி-க்கள் பொதுவாக வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NBFC NON BANKING FINANCIAL COMPANIES) வெளியிடப்படுகின்றன. இந்நிறுவனங்கள் வங்கிகளை விட இரண்டிலிருந்து நான்கு சதவிகிதம் வரை அதிகமான வட்டியைத் தருகின்றன. சற்று ரிஸ்க் அதிகமாக இருப்பதால் வருமானமும் அதிகமாக உள்ளது.

தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும் பொழுது, இது ஒரு நல்ல வருமானம் தரக்கூடிய முதலீடாக அமையும். தற்பொழுது வெளிவரும் என்.சி.டி-க்கள் பல செக்யூர்டு என்.சி.டி-கள் (SECURED NCD) ஆகும். இந்தவிதமான செக்யூர்டு என்.சி.டி-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துகளை அடமானமாக வைத்து முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன.

இதற்காக தங்களது ஒவ்வொரு செக்யூர்டு என்.சி.டி வெளியீட்டுக்கும் வங்கிகளிடம் டிபஞ்சர் டிரஸ்டை ஏற்படுத்துகின்றன. ஆகவே இவை நிரந்தர வைப்பு நிதிகளை விட அதிக பாதுகாப்பானவை.

தற்பொழுது வெளிவரும் டிபஞ்சர்கள் பொதுவாக 1,000 ரூபாய் முகமதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. குறைந்தபட்ச முதலீடு ரூ 10,000 ஆகும். இந்த என்.சி.டி-க்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. ஆகவே, எதிர்காலத்தில் தேவைப்படும் பொழுது பங்குச் சந்தையின் மூலம் முதலீட்டாளர்கள் விற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் இந்த டிபஞ்சர்களின் லிக்விடிட்டி சற்று குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குசந்தையின் மூலமாக கெடு தேதிக்கு முன் விற்கும் பொழுது லாபம் நஷ்டம் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த டிபஞ்சர்களை டீமேட் (DEMAT) கணக்குகள் மூலமும், டீமேட் கணக்கு இல்லாதவர்கள் சர்ட்டிபிஃகேட் (CERTIFICATE) வடிவிலும் வைத்துக் கொள்ளலாம். டீமேட் கணக்குகள் மூலமாக வைத்து கொள்ளும் பொழுது, வரும் வட்டிக்கு பொதுவாக மூலத்தில் வரி பிடித்தம் இல்லை. இருந்த பொழுதிலும் வரும் வட்டி வருமானமாக கருதப்படும். பிற முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டியைப்போல் இந்த வட்டியை நமது வருமான வரி தாக்கலில் எடுத்துச் செல்லவேண்டும். அதே சமயத்தில் சர்ட்டிபிஃகேட் வடிவில் இருக்கும் பொழுது, வாங்கும் வட்டி ஆண்டிற்கு ரூ 5,000-ற்கு மேல் இருக்கும் பொழுது மூலத்தில் வரிப்பிடித்தம் உண்டு.

இவ்விதமான உபகரணங்களில் முதலீடு செய்யும் பொழுது குறைந்தபட்சம் AA ரேட்டிங் இருக்குமாறு பார்த்துக்கொள்வது சிறந்தது. AAA ரேட்டிங் உள்ள நிறுவனமாக இருப்பது மிகவும் நன்று.

நிறுவனத்தைப் பொறுத்து, வெளியீட்டைப் பொறுத்து வெவ்வேறு கால இடைவெளிகளில் வட்டியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த டிபஞ்சர்களை ஓராண்டிற்கு மேல் வைத்திருந்து விற்கும் பொழுது நீண்ட கால (LONG TERM CAPITAL GAINS TAX) முதலீட்டு லாப வரி கட்டவேண்டும். இது பொதுவாக பணவீக்கத்திற்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு கட்டப்படுவதால், மிகக் குறைவாகவே வரி கட்ட வேண்டி இருக்கும்.

வரும் வருமானத்திற்கு, இண்டெக்ஸேஷனுடன் (INDEXATION) 20%-ம், இண்டெக்ஸேஷன் இல்லாமல் 10%ம் வரி செலுத்த வேண்டி இருக்கும். வரும் வாரத்தில் டேக்ஸ் ஃப்ரீ (Tax Free) பாண்டுகளைப் பற்றிப் பார்ப்போம்.

prakala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x