

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள விரிசலால், தேயிலை வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தேயி லையை ரஷியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அதிகமாக கொள்முதல் செய்கின்றன. இந்திய தேயிலையை ரஷியா 20 சதவீதம் இறக்குமதி செய்து முதலிடத்திலும், 12 சதவீதம் இறக்குமதி செய்து பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.
இந்நிலையில், சமீப காலமாக எல்லையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால், இரு நாடுகளிடையே ஏற்பட்ட திடீர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் தேயிலை கொள்முதலை நிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக குன்னூர் தேயிலை மையத்தில் தேயிலை விற்பனையில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டின் முதல் ஏலம் வர்த்தகர்களுக்கு லாபகரமாக துவங்கியது.
முதல் ஏலத்தில் விற்பனைக்கு வந்த சுமார் 15 லட்சத்து கிலோ தேயிலை தூளில் 95 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. இந்நிலையில், இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக சமீப காலமாக தேயிலை ஏல மையங்களில் விற்பனை குறைந்து வருகிறது.
குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் ஏல மையத்தில் நடந்த 39வது ஏலத்தில் மொத்தம் 15.37 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 71 சதவீத தேயிலை மட்டுமே விற்பனையானது.
29 சதவீத தேயிலை தூள் தேக்கமடைந்தது. பாகிஸ்தான் மட்டுமின்றி ரஷியா போன்ற நாடுகளும் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாததால், நீலகிரி தேயிலை வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.