Published : 14 Feb 2017 10:18 AM
Last Updated : 14 Feb 2017 10:18 AM

தொழில் முன்னோடிகள்: எஸ். அனந்தராமகிருஷ்ணன் (1905 - 1964)

ஸிம்ஸனில் வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஜே வாழ்வில் அக்னிப் பரீட்சைகள்.

1930 காலகட்டத்தில், இந்தியப் பொருளாதார நிலைமை மந்தமாக இருந்தது. ஸிம்ஸன்ஸ் கம்பெனிக்கு அப்போது இரண்டு விதமான பிசினஸ்கள் இருந்தன. இங்கிலாந்திலிருந்து கார்களை இறக்குமதி செய்வது, மற்றும் பஸ்களுக்கு பாடி அமைத்துக் கொடுப்பது. இரண்டு பிசினஸ்களும் அடிவாங்கிக்கொண்டிருந்தன. இந்தச் சவாலை மிகத் திறமையாக ஜே சமாளித்தார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணம் செய்தார். டீலர்களைச் சந்தித்தார். முழுப்பணத்தையும் கொடுத்துக் கார்கள், பஸ்கள் வாங்க மக்களிடம் வசதி இல்லை என்பதை உணர்ந்தார். அதுவரை யாரும் முயற்சித்திராத தவணைமுறையை மேலதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். அவர்கள் முதலில் பயந்தார்கள். ஆனால், ஜே வற்புறுத்தலால் ஒத்துக்கொண்டார்கள்.

1933. ஜே, தவணைமுறை விற்பனைக்கெனத் தனி இலாகா தொடங்கினார். அப்போது ஒரு பஸ் விலை 3,900 ரூபாய். இதில் 400 ரூபாயை முன்பணமாக வாங்கிக்கொண்டு, மீதப் பணத்தை 12 18 மாதங்களில் வாங்கிக்கொள்ளும் விற்பனைத் திட்டத்தை அறிவித்தார். போட்டியாளர்கள் ஆட்குறைப்புச் செய்துகொண்டிருந்தபோது, ஸிம்ஸ்ன்ஸ் வியாபாரம் எகிறியது.

கம்பெனிக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பொருளாதாரத்துக்கும் ஜே கடைப்பிடித்த யுக்தி உந்துசக்தியாக இருந்தது. குறைவான முதலீடே தேவைப்பட்டதால், ஏராளமான புதிய தொழில் முனைவர்கள் பஸ் சர்வீஸ்களும், டாக்சி சர்வீஸ்களும் தொடங்கினார்கள். பொதுமக்களின் போக்குவரத்து வசதியில் மாபெரும் முன்னேற்றம் வந்தது. தவணைமுறை விற்பனைக்குக் கிடைத்த அமோக வரவேற்பால், இதற்காகவே, 1938 - இல், ஸிம்ஸன் அன்ட் ஜெனரல் ஃபைனான்ஸ் கம்பெனி தொடங்கப்பட்டது. புதிய கம்பெனிகள் தொடர்கதையாகப் போகின்றன என்பதற்குச் சூசகமாக, அமால்கமேஷன்ஸ் என்னும் பதாகை நிறுவனமும் (ஹோல்டிங் கம்பெனி) 1938 - இல் உருவாக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் ஆட்சி அவர்கள் வசம் இருந்ததால், ஆங்கிலேயர்கள் இந்தியர்களைத் தங்கள்கீழ் வேலை பார்க்கும் குமாஸ்தாக்களாகவே நடத்தினார்கள். ஸிம்ஸனில் ஒரு ஆச்சரியம் நடந்தது. 1938. மக்டகல், லாடென் ஆகிய இருவரும் முதலாளிகள், இயக்குநர்கள். ஜே - க்குச் சம அந்தஸ்து தந்து மூன்றாவது இயக்குநராக நியமித்தார்கள். இந்தியத் திறமைக்கே ஜே பெற்றுத்தந்த மாபெரும் அங்கீகாரம்!

1940. முதலாளிகளில் ஒருவரான மெக்டகல், தன் பங்குகளைச் சகா லாடெனுக்கு விற்றார், இங்கிலாந்து திரும்பினார். இப்போது இன்னொரு திருப்பம். லாடெனுக்கு மூளையில் கட்டி வந்தது. கம்பெனியை விற்க முடிவெடுத்தார். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அதிகவிலை தரத் தயாராக இருந்தார். ஆனால், லேடென், ஜேயால் மட்டுமே ஸிம்ஸனின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்க முடியும் என்று நம்பினார். ஆனால், அத்தனை பணம் ஜே கையில் இல்லை. பரந்த மனம்கொண்ட லாடென் என்ன செய்தார் தெரியுமா? ஜேயின் மாதச் சம்பளத்திலிருந்து தவணைமுறையில் இந்தத் தொகையைப் பிடித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார்.

குழுமக் கடிவாளம் கையில் வந்தமையால், ஜே இன்னும் அதிகத் துணிச்சலோடு செயல்படத் தொடங்கினார். எடுத்துவைத்த முதல் அடி, பஸ் சர்வீஸ். 1939 - இல், மதுரையில் இருந்த ராமவிலாஸ் சர்வீஸ், பலராம் சர்வீஸ் என்னும் பஸ் நிறுவனங்களை ஜே வாங்கினார். எஸ். ஆர். வி. எஸ். என்று பெயர் வைத்தார். அடுத்து, சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் பஸ் சர்வீஸும், பார்சல் சர்வீஸும் தொடங்கினார். .

அப்போது, பல அரசியல் காரணங்களால், பெட்ரோல் இறக்குமதி அடிக்கடி தடைப்பட்டது. பஸ்கள், லாரிகள் கரி இன்ஜினில் ஓடத் தொடங்கின. 1939 - இல் இதற்காக, ஜே, கரி இன்ஜின் உற்பத்தி தொடங்கினார். இந்தியா முழுக்க அமோக விற்பனை. தேவையைச் சமாளிக்க, சென்னை தவிர, ஹைதராபாத், (டெல்லியை அடுத்த) காஜியாபாத் ஆகிய இடங்களிலும் ஸிம்ஸன்ஸ் தொழிற்சாலை தொடங்கினார்கள். சில வருடங்களில் பெட்ரோல் இறக்குமதி தாராளமானது. கரி இன்ஜின்கள் தயாரிப்பு முற்றுப்புள்ளி கண்டது.

1942. காந்திஜி தலைமையில் ’வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பல பிரிட்டிஷ் கம்பெனிகள் பிசினஸ்களை மூடிவிட்டுத் தாயகம் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தார்கள். ஜே இவர்களுக்கு வலை வீசினார். நேர்மை, வெளிப்படைத்தனம், நியாயமான விலை, சாதுரியப் பேச்சு. வலையில் சிக்கத் தொடங்கின பல விலாங்கு மீன்கள்.

அப்போது, இறக்குமதியாகும் கார்களின் விற்பனையில், ஸிம்ஸனின் முக்கிய போட்டிக் கம்பெனி, அடிசன். கம்பெனி சிரமதசையில் இருந்தது. ஜே அடிசனோடு பேச்சுவார்த்தை தொடங்கினார். ஜேயிடம் சில அடிப்படை அணுகுமுறைகள் இருந்தன - விற்பவர் சிரமத்தில் இருந்தாலும், அவர்களிடம் அடிமாட்டு விலை பேசக்கூடாது: வாங்கியபின் நிறுவனத்தில் ஆட்குறைப்போ, நிர்வாகிகளின் அதிரடி மாற்றங்களோ செய்யக்கூடாது.

தாங்கள் எதிர்பார்த்ததைவிட ஜே அதிக விலை தந்ததாக அடிசன் உரிமையாளர்களே ஒத்துக்கொண்டார்கள். 1943 - இல் அடிசன், அமால்கமேஷன் குழுமத்தின் அங்கமானது. அடுத்து, 1945 - இல், ஊட்டியில் இருந்த ஜார்ஜ் ஓக்ஸ் என்னும் கார் ரிப்பேர் காரேஜை ஜே வாங்கினார். அதே வருடம் ஜே வாங்கிய இன்னொரு நிறுவனம், அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ். அச்சகம், மெட்ராஸ் மெயில் நாளிதழ், ஹிக்கின்பாதம்ஸ் கடை ஆகியவை இதன் மூலம் ஸிம்ஸன்ஸ் பதாகையின் கீழ் வந்தன.

1947. இந்தியா சுதந்திரம் பெற்றது. தன் தொழிற்சாலைக் கனவுகளை நனவாக்க இதுதான் பொன்னான நேரம் என்று ஜே உணர்ந்தார். சென்னையை அடுத்த செம்பியத்தில் ஏராளமான நிலம் வாங்கிப்போட்டார். வரிசையாக வந்தன பல உற்பத்தித் தொழிற்சாலைகள்.

1948 - அடிசன் பெயின்ட்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ்.

1949 - இந்தியா பிஸ்டன்ஸ்.

தன் தொழிற்கனவுகளை ஜே நீரூற்றி வளர்த்துக்கொண்டிருந்தபோது, வந்தது ஒரு இடி. 1951 53 காலகட்டத்தில் ஸிம்ஸனில் யூனியன் பிரச்சினைகள் தலை தூக்கின. வன்முறை தலைவிரித்து ஆடியது. பல மாதங்கள் தொழிற்சாலைகளை மூடவேண்டிய நெஞ்சைக் கீறி ரணமாக்கும் கட்டாயம். ஆனால், ஜே உறுதியாக இருந்தார். பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின், இயந்திரங்கள் சுழன்றன. தொய்வுக்குப் பின் மறுபடியும் எழுச்சி. சில மைல்கற்கள்:

1955 - அடிசன் தொழிற்கருவிகள் தயாரிப்பு தொடக்கம்.

1952 - ஸிம்ஸன்ஸ் கார், லாரிகளுக்கான டீசல் என்ஜின்கள் தயாரிப்பு ஆரம்பம்.

1955 - ஆம்கோ பாட்டரீஸ் கம்பெனியை ஸிம்ஸன் வாங்கினார்கள்.

1960 - கார் பாகங்கள் தயாரிக்கும் ஷார்ட்லோ இந்தியா, டிராக்டர்கள் தயாரிக்கும் டாஃபே தொடக்கம்.

1961 - பை மெட்டல் பேரிங்ஸ் தொடக்கம்.

1961 - காப்பி, தேயிலைத் தோட்டங்கள், உரத் தயாரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய டி. ஸ்டேன்ஸ் குழுமத்தை அமால்கமேஷன்ஸ் வாங்கினார்கள்.

1962 - வைரத் தொழிற்கருவிகள் தயாரிக்கும் வான் மோப்ஸ் டூல்ஸ் திறப்புவிழா.

ஜே தொட்டதெல்லாம் துலங்கியது. 1964. ஜே உடல்நலக் குறைவுற்றார். தன் 59 - ஆம் வயதில் அகால மரணமடைந்தார்.

இத்தனை சாதித்தபோதும், நிறைவேறாத பல ஆசைகள் அவருக்கு இருந்தன. கார் தயாரிக்க விரும்பினார். அடிசன்ஸ் இங்கிலாந்திலிருந்து பிரசித்தி பெற்ற மோரிஸ் மைனர் கார் பாகங்களை இறக்குமதி செய்தார்கள். அசெம்பிள் செய்தார்கள். முழுகாரையும் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டார்கள். பிர்லாவின் ஹிந்துஸ்தான் மோட்டார் எதிர்ப்பினால், இது நடக்கவில்லை. பிரிட்டிஷ் லேலண்ட், லூகாஸ், பாஷ் (ஜெர்மனி) ஆகிய நிறுவனங்களோடு கை கோர்த்து பஸ்கள், ஆட்டோ எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ஸ்பார்க் ப்ளக்ஸ் தயாரிக்கும் பூர்வாங்க வேலைகள் செய்திருந்தார். அரசியல் சக்திகளுக்கும், ஆட்சிபீடத் துக்கும் வளைந்துகொடுக்காத அவர் அணுகுமுறையால், இவை சாத்தியமாக வில்லை. இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருந்தால், தடைகளை வென்று அனைத்தையும் சாதித்திருப்பாரோ?

குறிப்பிடத்தக்க பின்புலம் எதுவுமில்லாத இந்தக் குக்கிராமத்துச் சிறுவன் தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, விவசாயம் ஆகிய பல்வேறு அத்தியாவசியத் துறைகளில் தமிழ்நாடு கண்டிருக்கும் முன்னேற்றங்களின் சூத்திரதாரி. இந்த இடம், தமிழக வரலாற்றில் நிரந்தர இடம்.

சென்ற வாரம் வெளியான இக்கட்டுரையின் முதல் பாகத்தில் அனந்தராமகிருஷ்ணனின் பிறந்த ஊர் ஆழ்வார்திருநகரி என்று குறிப்பிட்டுவிட்டேன். ஆழ்வார்குறிச்சி என்று வந்திருக்கவேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். (கட்டுரைக்கான பல அரிய தகவல்கள் தந்து உதவிய அனந்தராமகிருஷ்ணனின் பேரர், ஷங்கர் சுந்தரம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.)

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x