

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மூலம் ரூ. 6.5 லட்சம் கோடி தொழில் வாய்ப்புகளை தமிழகம் பெற முடியும் என்று ஏரோஸ்பேஸ் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் (டிஆர்டிஓ) தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஏ. சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
தமிழக அரசு டைட்டானியம் ஆலை அமைத்து அதன் மூலம் பல தொழில் உற்பத்தி குழுமங்களை (கிளஸ்டர்) மாநிலம் முழுவதும் அமைக்கலாம். இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த உற்பத்தியாளர்கள் மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது: ராணுவத்துக்குத் தேவைப்படும் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான பொருள்களை இந்திய உற்பத்தியாளர்களிடம் வாங்குவதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. விமானம் மற்றும் ராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் சப்ளை செய்வதில் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த விற்பனைச் சந்தையை தமிழக தொழில் நிறுவனங்கள் உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இத்தயாரிப்புகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
தமிழகத்தில் டைட்டானியம் தாது அதிக அளவில் உள்ளது. 50 லட்சம் டன் அளவுக்கு தாது உள்ளதால் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் உற்பத்தித் திறன் கொண்ட டைட்டானியம் ஸ்பாஞ்ச் ஆலையை நிறுவலாம்.
தருமபுரி மற்றும் மதுரை-தூத்துக்குடி இடையிலான பகுதியில் ராணுவ மற்றும் விமானப்படைக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழில் பேட்டை யை (கிளஸ்டர்ஸ்) தமிழக அரசு நிறுவலாம் என்றும் பரிந்துரைத்தார். இதேபோல திருச்சி-தஞ்சாவூர் இடையிலான பகுதியில் ராணுவ உதிரிபாக தொழிற் சாலைகளையும், கோவையில் எலெக்ட்ரானிக்ஸ் உதிரிபாக தொழிற்சாலை களையும், வட சென்னையில் (எண்ணூர்-காட்டுப்பள்ளி) கடற்படை உதிரிபாக தொழிற் சாலைகளையும் அமைக்கலாம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் தொழில்திறன் மிக்கவர்கள் உள்ளதால், தொலைநோக்கு சிந்தனை கொண்ட தமிழக அரசு இதை உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டால் விமான உதிரிபாகம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளில் முன்னிலை பெற முடியும். இது மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசுகையில், விமான உதிரி பாக தயாரிப்பில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறந்து விளங்கி முன்னிலை பெறும் என்று குறிப்பிட்டார். பவர் கிரிட்டுடன் தென் பகுதியை இணைப்பதன் மூலம் மின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தயாரான பொருள் என்பதைப்போல தமிழகத்திலிருந்து தயாரான பொருள் என்ற அளவுக்கு பெருமை பெறும் வகையிலான தயாரிப்புகள் இங்கு உருவாகும் அதற்கு அடித்தளமிடும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் விஷன் 2023 ஆவணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.