Last Updated : 08 Jun, 2017 10:13 AM

 

Published : 08 Jun 2017 10:13 AM
Last Updated : 08 Jun 2017 10:13 AM

ஜிஎஸ்டி அமல்படுத்த வசதியாக பல்வேறு மறைமுக வரி விதிப்புகள் கைவிடப்பட்டுள்ளன: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்காக மத்திய அரசு விதிக்கும் பல்வேறு வரிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 பட்ஜெட்டில் உபரி வரி விதிப்புகள் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது வரி விதிப்பு சட்டம் 2017-ன் கீழ் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக உள்ளது. அப்போது மேலும் 13 வரி விதிப்புகள் கைவிடப்படும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் 7 வகையான வரி விதிப்புகள் ஜிஎஸ்டி அமலான பிறகும் தொடரும். இவை அனைத்தும் சுங்கம் மற்றும் பொருள் மீதான வரி விதிப்பாகும். இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராததால் இந்த வரி விதிப்புகள் தொடரும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான கல்வி வரி, இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான இடை நிலை மற்றும் மேல்நிலை கல்வி வரி, கச்சா எண்ணெய் மீதான வரி, மோட்டார் வாகன எண்ணெய், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்படும் வரி, மோட்டார் ஸ்பிரிட் மீதான கூடுதல் வரி, புகையிலை பொருள்கள் மீதான என்சிசிடி மற்றும் கச்சா பெட்ரோலியம் மீதான வரி ஆகியவை தொடர்ந்து விதிக்கப்படும்.

ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு வசதியாக அனைத்து விதமான கூடுதல் வரிகளும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. 2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வி வரி மற்றும் மேல்நிலை கல்வி வரி உள்ளிட்டவை சேவை மீது விதிக்கப்பட்டன. இவை அப்போது கைவிடப்பட்டது.

2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் சிமென்ட், ஸ்டிராபோர்டு மீதான (செஸ்) விலக்கப்பட்டது. இவை தவிர இரும்புத் தாது சுரங்கம், மாங்கனீஸ் தாது சுரங்கம், குரோமிய தாது சுரங்கம் ஆகியவற்றின் மீதான வரி நீக்கப்பட்டது.

புகையிலை பொருள் மீதான வரி கைவிடப்பட்டது. சினிமா பணியாளர் நல வரியும் கைவிடப்பட்டது. 2017-ல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வரியும் நீக்கப்பட்டது.

வரி சட்டம் 2017-ல் 13 புதிய வரி விதிப்புகள் கைவிடப்பட்டன. சூழல் பாதுகாப்பு வரி, ஸ்வாச் பாரத் வரி, கட்டமைப்பு வரி, கிருஷி கல்யாண் வரி உள்ளிட்டவையும் நீக்கப்பட்டன.

2017-ம் ஆண்டு வரி சட்டத்தில் சுங்கம் மற்றும் உற்பத்தி வரி விதிப்பு முறையை ஜிஎஸ்டிக்கு மாற்ற வழிவகை செய்யும் திருத்தம் கொண்டு வரப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது.

ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வழியேற்படுத்தும் விதமாக 16 விதமான வரி விதிப்பு முறைகள் கைவிடப்பட்டன. மதிப்பு கூட்டு வரி (வாட்), சேவை வரி, உள்ளூர் வரி ஆகியன கைவிடப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி முறையில் 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறைகள் அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. இதில் உயர்ந்தபட்சமான 28 சதவீத வரி விதிப்பானது சொகுசு பொருள்கள் மற்றும் தகுதியற்ற பொருள்கள் மீது விதிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x