பங்குச் சந்தையில் எழுச்சி; சென்செக்ஸ் 467 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மிக அதிக அளவிலான எழுச்சி காணப்பட்டது.
வர்த்தகம் முடிவில் மொத்தம் 467 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 20,882 ஆக உயர்ந்தது. ஆனால் வர்த்தகத்தின் இடையே 21000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சென்றது. தேசிய பங்குச் சந்தையில் 143 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6189 ஆனது.
கடந்த மூன்று ஆண்டுகளில் பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு புள்ளிகள் உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். 2010-ம் ஆண்டு நவம்பரில் பங்குச் சந்தையில் இந்த அளவுக்கு ஏற்றம் காணப்பட்டது.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக அளவில் பங்குகளை வாங்கியதும் எழுச்சிக்கு முக்கியக் காரணமாகும். அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் வியாழக்கிழமை ரூ.1,100 கோடி அளவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர்.
அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து 10வது நாளாக இந்திய பங்குச்சந்தையில் செய்து வருகிறார்கள். கடந்த 10 நாட்களில் 7,847 கோடி ரூபாய் அளவுக்கு அவர்கள் செய்துள்ள முதலீடு செய்துள்ளார்கள்.
கடந்த 16 நாள்களாக அமெரிக்க அரசு அலுவலகங்கள் முடங்கியிருந்த நிலை மாறிய தும் மும்பை பங்குச் சந்தையில் எழுச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
வங்கித் துறை, உலோகம், முதன்மைப் பங்குகள் கணிசமான முன்னேற்றம் கண்டன. வங்கி பங்குகளின் குறியீடும், உலோகப்பங்குகளின் குறியீடு 2 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்தது.
சேசா ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி வங்கி பங்கு பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன. பஜாஜ் ஆட்டோ நிறுவனப் பங்கு விலை மட்டும் சற்று சரிந்தது.
ஐரோப்பிய சந்தைகளிலும் எழுச்சி காணப்பட்டது. 2008-ம் ஆண்டு இருந்த நிலைக்கு பங்குச் சந்தை குறியீட்டெண்கள் உயர்ந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததால் ஆசிய பங்குச் சந்தையில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் உலோகப் பங்குகளில் டாடா ஸ்டீல், சீசா ஸ்டெர்லைட், ஜின்டால் ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹின்டால்கோ ஆகிய நிறுவனப் பங்கு விலைகள் ஒரு சதவீதம் முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் பங்கு விலை 2 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 1 சதவீதமும் உயர்ந்தன.
