Last Updated : 01 Jul, 2016 08:38 PM

 

Published : 01 Jul 2016 08:38 PM
Last Updated : 01 Jul 2016 08:38 PM

2005-க்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் மாற்ற புதிய விதிமுறைகள்

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை இனி வங்கிகளில் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை நேரடியாக மாற்ற வேண்டுமெனில் நாடு முழுவதும் உள்ள 20 ரிசர்வ் வங்கி அலுவலகங்களை அணுகலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தவிர தங்களது வங்கிக் கணக்கு வழியாகவும் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி வழி செய்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால், அந்த நோட்டுகளை வங்கிகள் சேகரித்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப உள்ளன.

2005 க்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்ப பெறுவதாக 2014 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் நேரடியாக மாற்றிக் கொள்ளவும் வகை செய்யப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் இனிமேல் பொதுமக்கள் நேரடியாக வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியாது என அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட பெரும்பாலான 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்பட்டுவிட்டன. மிகக் குறைந்த அளவிலேயே தற்போது திரும்ப வரவேண்டி உள்ளதால் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது என அறிவித்துள்ளது.

நேரடியாக மாற்றிக்கொள்ள வேண்டுமெனில் ரிசர்வ் வங்கியின் கிளை அலுவலகங்களை அணுகலாம். அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புபனேஷ்வர்,சண்டிஹார், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம், மற்றும் கொச்சி என 20 நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

2005க்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அந்த நோட்டுகள் அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. இனி அந்த நோட்டுகளை நேரடியாக பயன்படுத்தினால் செல்லாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x