

கிங்பிஷர் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் வழங்கிய கடன்கள் பற்றிய விவரங் களை அளிக்குமாறு தீவிர மோசடி களை விசாரிக்கும் புலானாய்வுக் குழு (எஸ்எப்ஐஓ) வங்கிகளிடம் கேட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வங்கிகள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கிய கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு கேட்கிறது எஸ்எப்ஐஓ. கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள கடன்களில் அனைத்து விதி முறைகளும் சரியாக பின்பற்றப் பட்டுள்ளதா என்று எஸ்எப்ஐஓ தெரிந்துகொள்ள நினைக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிர மோசடிகளை விசாரிக் கும் புலனாய்வுக் குழு நிதி தொடர் பான மோசடிகளை விசாரிக்கும் அமைப்பாகும். நிறுவன விவகாரங்க ளுக்கான அமைச்சகம் பரிந்துரைக் கும் மோசடி வழக்குகளை இந்த அமைப்பு விசாரிக்கும்.
இந்த விவரங்களை எஸ்எப்ஐஓ கேட்டிருப்பது, கிங்பிஷர் நிறுவனத் திற்கு வழங்கப்பட்டுள்ள மொத்தக் கடனில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆராய ந்து பார்ப்பதற்காகத்தான் என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் கிங்பிஷர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடனில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்திருக் கிறதா என்பதை எஸ்எப்ஐஓ அமைப்பு விசாரிக்கும் என்று தெரிவித்திருந் தார். மேலும், ‘எஸ்எப்ஐஓ தற்போது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விசாரித்து வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் அது பற்றி கருத்துக் கூற முடியாது’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிங்பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாய் கடனை எஸ்பிஐ தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பு உட்பட மற்ற பிற வங்கிகளுக்கும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கடந்த ஜூன் 14ம் தேதி, தொழிலதி பர் விஜய் மல்லையாவை தேடப் படும் குற்றவாளியாக மும்பை யில் உள்ள சட்டவிரோத பணப்பரி வர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் (பிஎம்எல்ஏ) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.