

வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் ஆங்லோ அமெரிக்கன் நிறுவனத்தில் 240 கோடி டாலர் முதலீடு செய்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஆங்லோ அமெரிக்கன். இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. உலகின் ஐந்து முக்கியமான சுரங்க நிறுவனங்களில் இதுவும் ஒன்று. அதிக வைரத்தையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்கிறது. டி பீர்ஸ் என்னும் பெயரில் இந்த நிறுவனத்தின் வைரங்கள் விற்கப்படுக்கின்றன.
இந்த முதலீடு மூலம் தென் ஆப்ரிக்க நிறுவனத்தில் இரண்டாவது மிகப்பெரிய பங்குதாரராக அனில் அகர்வால் இருக்கிறார். லண்டன் பங்குச்சந்தையில் அதிக லாப மீட்டிய நிறுவனங்களில் ஆங்லோவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டு 288 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. தாமிரம், பிளாட்டினம், வைரம், இரும்பு தாது, மாங்கனிஸ், நிலக்கரி மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களை வெட்டி எடுக்கிறது.
அனில் அகர்வாலின் குடும்ப அறக்கட்டளையான வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. அனில் அகர்வால் தனிப்பட்ட முறையில் செய்த முதலீடு இது, ஆங்க்லோ அமெரிக்கன் நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் வேதாந்தா தெரிவித்துள்ளது.