

டாடா பவர் மற்றும் அதானி பவர் ஆகிய நிறுவனங்கள் ஐந்து மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிறுவனங்கள் இந்தோ னேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்கின்றன. 2010-ம் ஆண்டு இந்தோனேஷியா அரசு தன்னுடைய ஏற்றுமதி விதிகளில் மாற்றம் செய்தது. இதன் காரண மாக மத்திய மின் உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் கட் டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியது.
இந்த கட்டண உயர்வை அடுத்து, மாநில மின் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இதனைத் தொடர்ந்து அடுத்து ஐந்தாண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு நிறுவனங்களும் 8620 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, பங்கு வர்த்தகத்தில் இரு பங்குகளும் நேற்று கடும் சரிவை சந்தித்தன. அதானி பவர் பங்கு 15.93 சதவீதம் சரிந்து 37.20 ரூபாயில் முடிவடைந்தது. டாடா பவர் பங்கு 1.84 சதவீதம் சரிந்து 85.45 ரூபாயில் முடிவடைந்தது.