

முந்தைய வாரத்தில் தொடர்ந்து இரண்டு நாள் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை ஏற்றம் பெற்றது.
வர்த்தகம் முடிவில் 141 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 21205 புள்ளிகளானது. மூன்றாம் காலாண்டில் விப்ரோ நிறுவனம் கணிசமாக லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து பங்குச் சந்தை உயர்வுக்கு அந்நிறுவனப் பங்குகள் காரணமாயின.
தகவல் தொழில்நுட்பத் துறையின் பிற பங்குகளும் ஏற்றம் பெற்றன. டிசிஎஸ் பங்கு விலை 5.53 சதவீதமும், விப்ரோ பங்கு விலை 3.37 சதவீதமும், இன்ஃபோசிஸ் பங்கு விலை 0.59 சதவீதமும் உயர்ந்தன.
தேசிய பங்குச் சந்தையில் 52 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 6303 புள்ளிகளானது. முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலை 1.70 சதவீதம் சரிந்து ரூ. 869.50-க்கு விற்பனையானது. ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போல கோல் இந்தியா நிறுவன பங்கு விலை 1.12 சதவீதமும், டாடா பவர் 1.02 சதவீதமும் சரிந்தன.
முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் பிஹெச்இஎல், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகள் கணிசமான லாபம் ஈட்டின. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் செய்த முதலீடு ரூ. 75.27 கோடியாகும்.
பங்குச் சந்தையில் மொத்தம் 1,407 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. 1,238 நிறுவனப் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 152 நிறுவனப் பங்கு விலை யில் எவ்வித மாற்றமும் இல்லை. பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகம் ரூ. 1,831.60 கோடி. கடந்த வெள்ளியன்று ரூ. 3,133 கோடிக்கு வர்த்தகமானது.