

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறது. இது குறித்து இந்திய அரசு தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வேலைகளை இந்தியர்கள் பறிக்கவில்லை. மாறாக இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்ட ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது: இந்தியாவின் கருத்தினை அமெரிக்க அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். இந்தியர்கள் அமெரிக்க வேலைகளை பறிக்கவில்லை என்பதையும் அமெரிக்கா புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய நிறுவனங்கள் 2,000 கோடி டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்தி இருக்கிறது.
4 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி இருக்கிறது. பார்சூன் 500 நிறுவனங்களில் 75 சதவீதத்துக்கு மேலான நிறுவனங்களுக்கு மதிப்பு கூடுதல் பணியை இந்திய ஐடி நிறுவனங்கள் செய்கின்றன. இந்திய ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகள் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சொத்தாகும் என்று கூறினார்.
டிஜிட்டல் இந்தியா குறித்து கூறும்போது, 125 கோடி நபர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். இதில் 108 கோடி நபர்களுக்கு செல்போன் இருக்கிறது. சமீபத்தில் பீம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதனை 1.8 கோடி நபர்கள் தரவிறக்கம் செய்திருக்கின்றனர். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக இருக்கும். இந்த துறையில் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆபாச இணைய தளங்கள் குறித்த கேள்விக்கு, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்களுடைய அறையில் ஆபாச படங்கள் பார்ப்பதை யார் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.