

கள்ளநோட்டு புழக்கத்தை கண்டு பிடிப்பதற்காகவும் தடுப்பதற் காகவும் 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களை மூன்று அல்லது நான்கு வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த இரண்டு உயர்மதிப்பு நோட்டுகளிலும் சர்வதேச தரத்தில் பாதுகாப்பு அடையாளங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு நான்கு மாத காலத்தில் இந்தியாவில் கள்ளநோட்டுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இனி கள்ளநோட்டு புழக்கம் ஏற்படாதவாறு பாதுகாப்பு அடையாளங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷி, மத்திய நிதித்துறை மற்றும் உள்துறை மூத்த அதிகாரிகள் ஆகியோர் சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மற்ற நாடுகளில் பண நோட்டு களின் பாதுகாப்பு அடையாளங் களை 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றி வருகின்றனர். எனவே அதேபோல் முறையை இந்தியா கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பை பெரிய அளவுக்கு மாற்றியதில்லை. உதாரணமாக 2000-வது ஆண்டில் 1,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரிய அளவில் வடிவமைப்பிலோ பாதுகாப்பு அம்சங்களிலோ மாற்ற செய்யவில்லை. அதேபோல் 1987-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டிலும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகே 500 ரூபாய் நோட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போன்றுதான் புதிய நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒருமுறை உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அடையாளங்கள் மாற்றினால் இந்தியாவில் கள்ளநோட்டுகள் உருவாததைத் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டில் இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வின் படி இந்தியாவில் கள்ளநோட்டு புழக்கத்தின் மதிப்பு ரூ.400 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.