

வங்கிகள் அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தினால், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் எனும் நிறுவனம் எச்சரித்துள்ளது.
முன்னணியில் உள்ள 500 நிறுவனங்கள் கூட வட்டி அதிகரிப்பால், திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் பட்டியலில் விழும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி தனது காலாண்டு நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. ஏற்கெனவே ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட நிதிக் கொள்கையில் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கெனவே வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பணவீக்கம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளதால், இனியாவது வட்டிகுறைப்பு மூலம் தொழில் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளாது என்றே கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை அறிக்கையில் கடன் சுமை 16 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இது 15 சதவீதமாக இருந்தது.