

அதிக சம்பளம் பெறும் சிஇஓ பட்டியலில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். கடந்த நிதி ஆண்டில் இவர்களது ஆண்டு சம்பளம் ரூ. 56.25 கோடியாகும். இவர்களுக்கு அடுத்தபடியாக ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்தின் நவீன் ஜின்டால் ரூ. 54.98 கோடியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முந்தைய நிதி ஆண்டில் (2011-12) ஜின்டால் பெற்ற சம்பளம் ரூ. 73.42 கோடியாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்துக்கான போட்டி கலாநிதி மாறன், ஜின்டால் இடையேதான் உள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவின் சம்பளம் ரூ. 49.62 கோடி. ஹீரோ குழுமத்தின் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் ரூ. 32.72 கோடி, பவன் முன்ஜால் ரூ. 32.80 கோடி மற்றும் சுநீல் முன்ஜால் ரூ. 31.51 கோடியோடு அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளனர். ராம்கோ சிமென்ட்ஸ் பிஆர்ஆர் ராஜா, மாருதி சுசுகி முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நகானிஷி, டிவிஸ் லேப் ரவி கே திவி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பிஜிஆர் எனர்ஜி பிஜி ரகுபதி, டாடா மோட்டார் முன்னாள் தலைவர் கால் பீட்டர் பார்ஸ்டர் ஆகியோர் இம்முறை பட்டியலில் இடம்பெறவில்லை.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி ஆனந்த் மஹிந்திரா. சுநீல் மித்தல் ஆகியோர் அதிகம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.