

விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கைகள், வங்கியிலிருந்து கடன் பெற்று அதை திரும்ப செலுத் தும் முறையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் (எஸ்பிஐ) அருந் ததி பட்டாச்சார்யா தெரிவித்துள் ளார். இத்தகைய சலுகைகள் கடன் பெற்ற மற்ற வாடிக்கையாளர் களைப் பாதிக்கும். இதனால் கடனைத் திரும்ப செலுத்துவதில் உள்ள ஒழுங்குமுறை சிக்கலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மத்தியில் ஆளும் பாஜக பிரசாரம் செய்தது.
விவசாயக் கடன் தள்ளுபடி நடவடிக்கை கடனைத் திரும்ப செலுத்தும் முறையை வெகுவாகப் பாதிக்கும். எதிர்காலத்தில் கடன் பெறுவோர், தாங்கள் பெறும் கடனும் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். இதனால் எதிர்காலத்தில் விவசாயிகளுக்குக் கொடுக்கும் கடன் திரும்பாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் பட்டாச்சார்யா இக்கருத்தைத் தெரிவித்தார்.
இப்போது விவசாயிகள் பெற்ற கடனை அரசு வங்கிகளுக்கு செலுத்திவிடும். அடுத்து விவசாயி களுக்கு கடன் தேவைப்படும்போது, வங்கிகளிலிருந்து அதைப் பெறும் விவசாயிகள் அடுத்த தேர்தலில் இதுபோன்ற அறிவிப்பு வரும் எனவும் இதைப் போன்று தள்ளுபடி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கத் தொடங்குவர். பாரத ஸ்டேட் வங்கியைப் பொறுத்த மட்டில், இதுவரை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டியது தொடர்பான எந்த அறிவிப்பும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து வரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு உதவ வேண் டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால் கடனைத் திரும்ப செலுத்தும் நெறிமுறையை பாதிக்கும் வகையில் அந்த உதவி அமைந்துவிடக் கூடாது என்பதே தனது கருத்து என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு கடன் கிடைக்கச் செய்வதன் மூலம்தான் அவர்கள் பயிர் செய்து இந்த சமூகத்துக்கு வழங்குவர். கடன் கிடைப்பதில் சிரமம் இருக்கக் கூடாது என்பதில் வங்கிகள் கவனமாக உள்ளன. அதேபோல கடனைத் திரும்ப செலுத்துவதில் ஒழுங்கு முறை நிலவுவது மிகவும் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சமீபத்தில் ரூ.6 ஆயிரம் கோடிக்கான கடனை வசூலிப்பதில் ஒருமுறை செலுத்தும் (ஓடிஎஸ்) சலுகையை எஸ்பிஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதேபோல கல்விக் கடன் மற்றும் சிறு, குறுந்தொழில் துறைக்கான கடன் ஆகியவற்றை வசூலிப்பதற்காக இதுபோன்ற ஓடிஎஸ் திட்டத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.