Last Updated : 28 Jan, 2014 10:43 AM

 

Published : 28 Jan 2014 10:43 AM
Last Updated : 28 Jan 2014 10:43 AM

விலையேற்றம் - என்றால் என்ன?

பணவீக்கம் என்றால் தொடர்ச்சியாக உயரும் பொது விலை மட்டம். பொது விலை மட்டம் உயர்ந்தால் பணத்தின் மதிப்பு குறைகிறது என்று அர்த்தம். இதனை பொது விலையேற்ற குறியீட்டின் (Price Index) மூலமாக தெரிவிக்கலாம்.

பண்டைய காலம் தொட்டே பணவீக்கம் ஆட்சியாளர்களுக்கு பிரச்lசினையாக இருந்துவருகிறது. மன்னர்கள் சட்டம், அடக்கு முறை உள்ளிட்ட வழிகளில் கூட விலையேற்றதை தடுக்க முயன்றுள்ளனர். இப்போது கூட விலையேற்றத்தை மக்களின் பேராசையின் விளைவு என்றும், பலநேரங்களில் பொருட்களின் விலைகளை சட்டரீதியாக கட்டுப்படுத்த அரசுகள் முயற்சிக்கின்றன.

பணவீக்கத்தை அறிய மட்டுமே விலையேற்றம் பயன்படக்கூடியது அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என்று அறியவும் இது பயன்படும். இதற்காகத்தான், விவசாயத் தொழிலாளர்கள் விலைக்குறியீடு, நகர்ப்புற தொழிற்சாலை தொழிலாளர்கள் விலைக் குறியீடு என்று பல வகை விலைக்குறியீடுகளை கணக்கிடுகிறோம். இவைமட்டுமல்லாமல் மொத்த விலைக் குறியீடு (Wholesale Price Index WPI), நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index CPI), உள்ளிட்டவையும் கணக்கிடப்படுகின்றன.

ஒரிண்டு பொருட்களின் விலை மட்டுமே அதிகரித்தால், நம் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்படைவதில்லை. ஆனால், பெரும்பாலான பொருட்களின் விலை தொடர்ந்து உயரும் போது, நாம் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். எனவே, விலையேற்றம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பது தெரியவேண்டும். ஆனால், விலையேற்றக் குறியீடுகளை கணக்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லாப் பொருட்களின் விலைகளும் ஒட்டுமொத்தமாக அதிகமாவதில்லை. சில பொருட்களின் விலைகள் உயரும்போது, வேறு சில பொருட்களின் விலைகள் குறைவதும் உண்டு. நம் ஒவ்வொருவரின் நுகர்வு தன்மைக்கேற்ப சில பொருட்களின் விலையேற்றம் நம்மை அதிகமாக பாதிக்கும். எனவே ஒரு பொருளின் விலையேற்றம் எல்லோரையும் சமமாக பாதிப்பதில்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் போக்குவரத்தில் அதிகமாக பயன்படுத்துவதால், இவ்விலையேற்றம் நம் அனைவரையும் ஓரளவிற்கு பாதிக்கும் என்பதை உணர்கிறோம். நான் பொது பேருந்தை பயன்படுத்துபவனாக இருந்தால், அவ்வப்போது உயரும் பெட்ரோல் அல்லது டீசல் விலை என்னை அவ்வளவாக பாதிப்பதில்லை. மாறாக, அன்றாடம் தனியார் வாகனம் பயன்படுத்துவோரை இவ்விலையேற்றம் அதிகமாகவே பாதிக்கும். இந்த சூழலில்தான் விலையேற்றத்தை அளவிடும் முறை சிக்கலாக இருக்கிறது.

ஒவ்வொரு பொருளின் விலையேற்றம் எவ்வளவு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழுவின் (தினக்கூலித் தொழிலாளர்கள், மாத சம்பளம் வாங்குபவர் என்ற பல குழுக்கள்) நுகர்வை எவ்வாறு பாதிக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்து பொது விலை மட்டத்தின் உயர்வை கணக்கிடவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x