

தமிழ்நாட்டில் அமையவுள்ள மெகா மின் திட்டப் பணிக்கு 7 நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஒடிசாவில் அமையவுள்ள மின் திட்டப் பணிக்கு 5 நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
டாடா பவர், அதானி பவர், வேதாந்தா மற்றும் தேசிய அனல் மின் கார்ப்பரேஷன் (என்டிபிசி) ஆகிய நிறுவனங்கள் போட்டியிடும் நிறுவனங்களில் முக்கியமானவையாகும். தமிழகத்தில் செய்யூரில் அமையவுள்ள மெகா மின்னுற்பத்தி ஆலை அமைக்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மெகா மின் திட்டம் என்பது உள்ளூரில் கிடைக்கும் நிலக்கரி அல்லது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலம் செயல்படும் அனல் மின் நிலையமாகும். இந்த ஆலை 2,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். இதற்கான முதலீடு ரூ. 20 ஆயிரம் கோடி. ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், என்ஹெச்பிசி, பிஹெச்இஎல், சிங்கரேணி கோலரீஸ் நிறுவனம் உள்ளிட்டவையும் இந்த அனல் மின் நிலையம் அமைக்க விண்ணப்பித்துள்ளன. ஒடிசாவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 25-ம் தேதியாகும். தமிழக மின்னுற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவம்பர் 28-ம் தேதியாகும்.
இரு ஆலைகளுக்கும் வந்துள்ள விண்ணப்பங்கள் இந்த வாரத்திற்குள் பிரிக்கப்படும். இதில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு திட்டப்பணியை நிறைவேற்றித்தருவதற்கான தொகையைத் தெரிவிக்குமாறு கூறப்படும். இதையடுத்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை 3 முதல் 4 வாரங்களுக்குள் முடிக்கப்படும். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை டிசம்பரில் அனுப்புமாறு கோரப்படும்.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முதல் கட்ட விண்ணப்ப ங்களைக் கோரியுள்ளது. இந்த இரு மெகா திட்டப் பணிகளை செயல்படுத்தும் நிறுவனமாக பவர் பைனான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது.
அரசின் தளர்த்தப்பட்ட விதிகளின்படி எரிபொருள் விலையேற்ற அடிப்படையில் அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்த மின் திட்டப் பணிகளுக்குத் தேவையான கருவிகளை உள்நாட்டிலேயே கொள்முதல் செய்து கொள்ளலாம். இதுவரையில் நான்கு மெகா மின் திட்டப் பணிகள் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் சாசன் எனுமிடத்திலும், ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ண பட்டினத்திலும், ஜார்க்கண்டில் திலயா எனுமிடத்திலும் மின் நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் மின் நிலையம் அமைப்பதற்கான அனுமதியை டாடா பவர் பெற்றுள்ளது.