Last Updated : 21 Mar, 2014 11:15 AM

 

Published : 21 Mar 2014 11:15 AM
Last Updated : 21 Mar 2014 11:15 AM

ஊதிய உயர்வு கோரி போராட்டம்: 17 தொழிலாளர் இடைநீக்கம் - டொயோட்டா நிறுவனம் நடவடிக்கை

பெங்களூரை அடுத்த பிடதியில் இருக்கும் டொயோட்டா கார் நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய தொழிலாளர்களில் 17 பேரை அந்த நிறுவனம் அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தில் ஆண்டு தோறும் 3 லட்சத்து 10 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6400 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 2 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலா ளர்கள். 2013-14 ஆண்டிற்கான ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வழங்கக் கோரி, கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

டொயோட்டா நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள், கடந்த இரு வாரங்களாக முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் 25 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி டி.கே.எம்.தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அப்போது தொழிலாளர்கள் தரப்பில் 8000 ரூபாய் ஊதிய உயர்வும், பயணப்படி உள்ளிட்ட பல்வேறு படிகளை இரு மடங்கு உயர்த்தி வழங்குமாறும், ஏற்கெனவே பிடித்தம் செய்திருக்கும் தொகையை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்காத நிறுவனம் 3500 ரூபாய் முதல் 4000 வரை மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று தெரிவித்தது. நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

17 பேர் இடைநீக்கம்

இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. கடந்த திங்கள்கிழமை முதல் டொயோட்டா நிறுவனத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள், போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் 17 தொழிலாளர்களை வியாழக் கிழமை பணி இடைநீக்கம் செய்தது. ஒழுங்கு நடவடிக்கை, தவறான நடத்தை காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.கே.எம். தொழிற்சங்கத்தின் தலைவர் பிரசன்ன குமார் கூறியதாவது: “17 தொழிலாளர்களை திடீரென பணியிடை நீக்கம் செய்திருப்பதை ஏற்கமுடியாது. தொழிலாளர் சட்டப்படி தொழிலாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான எச்சரிக்கை நோட்டீஸை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இத்தகைய எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் டொயோட்டா நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்கு தொடர இருக்கிறோம்.” என்றார்.

டொயோட்டா நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், “கடந்த 25 நாட்களில் 2000 வாகனங்களின் உற்பத்தி தடைபட்டிருக்கிறது. இதன் காரணமாக டொயோட்டா நிறுவனத்திற்கு அதிக நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சங்கம் கொஞ்சமும் ஏற்க முடியாத அளவிற்கு ஊதிய உயர்வை கேட்கிறார்கள்.இருப்பினும் தொழிற்சங்கத்துடன் சுமுகமாக பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x