Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

பங்குச்சந்தையில் கடும் சரிவு

வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் முடிவடைந்தன. டெக்னாலஜி பங்குகள் சரிந்ததே பங்குச்சந்தைகளின் சரிவுக்கு முக்கிய காரணமாகும். பாம்பே பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 201 புள்ளிகள் சரிந்து 21063 புள்ளிகளில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 21015 புள்ளிகள் வரை சென்செக்ஸ் சரிந்தது.

வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாது என்ற எதிர்பார்ப்பு, தற்போது வந்துகொண்டிருக்கும் நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை, வெள்ளிக்கிழமை வெளியேறிய அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், முதலீட்டாளர் களிடையே லாபத்தை வெளியே எடுக்கும் போக்கு ஆகிய அனைத்தும் சேர்ந்தன் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 6261 புள்ளிகளில் முடிவடைந்தது. ஐ.டி. துறையின் முக்கிய குறியீடான பி.எஸ்.இ.ஐடி. 246 புள்ளிகள் சரிவடைந்தது. இதற்கு அடுத்து வங்கி துறை பங்குகளின் குறியீடு 199.44 புள்ளிகள் வரை சரிந்தது. மீடியா மற்றும் என்ட்ர்டெயின்மெண்ட் துறை பங்குகளின் குறியீடும் 198 புள்ளிகள் வரை சரிந்தது.

எஃப்.எம்.சி.ஜி. குறியீடு (4.26), ஆட்டோமொபைல் குறியீடு (4.19) மற்றும் ஆயில் அண்ட் கேஸ் குறியீடு (21.87) ஆகியவை மிகவும் சிறிய அளவில் உயர்ந்தன. 12 துறை குறியீடுகளில் 9 துறை குறீயிடுகள் சரிவிலேயே முடிவடைந்தன.

பி.எஸ்.இ. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்தன. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல்., சிப்லா, ஹெச்.யூ.எல்., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் சிறிதளவு உயர்ந்தன.

டி.சி.எஸ்.(5.77%), விப்ரோ(3.15%), ஹெச்.டி.எஃப்.சி. (2.58%) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (2.44%), ஆக்ஸிஸ் வங்கி (2.05%) ஆகிய பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன.

ஆசிய பங்குச்சந்தையிலும் மந்தமான போக்கே இருந்தது. ஜப்பான் சந்தையான நிக்கி 0.39 சதவீதம் சரிந்தும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 0.02 சதவீதம் சரிந்தும் முடிவடைந்தன. ஆனால் ஹாங்காங் சந்தையான ஹெங்செங் 0.37 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தது. இந்த மந்த நிலை ஐரோப்பிய பங்குசந்தையிலும் தொடர்ந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.54 ரூபாய் என்ற நிலையில் முடிவடைந்தது.

ஐ.ஓ.சி 6% உயர்வு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களிடமிருந்து 10 சதவீத பங்குகளை மத்திய அரசு விலகிக்கொள்ள ஒப்புதல் அளித்ததுதான் இந்த உயர்வுக்கு காரணம். ஐ.ஓ.சி. பங்கு 5.87 சதவீதமும், ஓ.என்.ஜி.சி. பங்கு 0.17 சதவீதமும் உயர்ந்தன. ஆனால் ஆயில் இந்தியா பங்கு 0.92 சதவீதம் சரிந்தது.

ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங் களிடமிருந்து மத்திய அரசு தன் பங்குகளை விலகிக்கொள்வதன் மூலம் 4,800 முதல் 5,000 கோடி ரூபாயை திரட்ட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x