ஒருமித்த கருத்து அடிப்படையில் ஜிஎஸ்டியை நிறைவேற்ற அரசு விருப்பம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

ஒருமித்த கருத்து அடிப்படையில் ஜிஎஸ்டியை நிறைவேற்ற அரசு விருப்பம்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து
Updated on
1 min read

ஒருமித்த கருத்து அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதாக்களை நிறைவேற்றவே அரசு விரும்புகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்கள் கூட்டம் டெல்லியில் நடை பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இத்தகவலை தெரிவித் தார்.

இக்கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி மசோதா குறித்து விளக்கினார். இந்த மசோதாக்கள் நாட்டின் இறையாண்மை விதிகளின் படி ஒருமித்த கருத்து அடிப்படையில் நிறைவேற்ற அரசு விரும்புகிறது என்று கூறினார். இந்த மசோதாக்கள் அனைத்து மாநில அரசுகளிடமும் பேச்சு நடத்தி ஒருமித்த கருத்து எட்டப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த இந்த ஒருமுனை வரி விதிப்பு முறையை கருத் தொற்றுமை அடிப்படையில் கொண்டு வரவே விரும்புவதாக ஜேட்லி கூறினார் என்று ஆனந்த் குமார் கூறினார்.

சிஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, யுஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு மசோதா குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிய அவர் இந்த மசோதாக்கள் எந்த அளவுக்கு பயனுள்ளவை என்று விரிவாகக் கூறினார்.

`ஒரு தேசம் ஒரே வரி’ என்ற கொள்கை அடிப்படையில் இந்த வரி சீர்திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக ஜேட்லி கூறினார்.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்த மசோதா ஒருமித்த கருத்தொற்றுமை அடிப்படையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாவால் சாதாரண மக்களும் பயனடைவர் என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதா நிறைவேற்றத் தால் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் என்று குறிப்பிட்டார்.

திங்கள்கிழமை 4 ஜிஎஸ்டி மசோதாக்களையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். சுதந்திரத்துக்குப் பிறகு வரி விதிப்பு முறையில் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தம் இதுவாகும் என்று அவர் அப்போது கூறினார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி முறையை ஜூலை 1 முதல் அமல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீத அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக் கான தேசிய ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை முடிவு குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in