பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது: அமெரிக்காவில் அருண் ஜேட்லி

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது: அமெரிக்காவில் அருண் ஜேட்லி
Updated on
2 min read

இந்திய அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களின் முடிவுகள் இதை நன்கு உணர்த்தியுள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

வாஷிங்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேட்லி, அங்கு இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், தொழில்துறை தலைவர்கள், பொருளாதார ஆர்வலர்கள், இந்திய – அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் சீர்திருத்தங்களை அரசு ஒவ்வொரு கட்டமாகத்தான் நிறைவேற்றியது. பெரும்பாலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் அரசியல் குறுக்கீடுகள் அதிகமிருக்கும். இதனாலேயே சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பிலிருக்கும். இதனாலேயே உலக அளவில் இந்திய மக்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு காத்திருக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இப்போது இந்த கேள்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.

அடுத்தடுத்து வந்த தேர்தல் முடிவுகள் மக்கள் மிகச் சிறந்த பொருளாதார சீர்திருத்தத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதை உணர்த்திவிட்டது என்று ஜேட்லி குறிப்பிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஒரே சீராக உள்ளது. அதேசமயம் உலகின் பிற நாடுகளில் பொருளாதார தேக்க நிலை நிலுவியது. சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவியபோதிலும் சீரான வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. அனைத்து பொருளாதார காரணிகளும் மிகச் சிறப்பாக செயல்படுவதோடு அனைத்தும் உரிய கட்டுக்குள் உள்ளது என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே 7.2 சதவீதம், 7.9 சதவீதம் மற்றும் 7.1 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இது வரும் ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மோடி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறந்த பொருளாதாரத்துக்கான கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளன. சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று அவர் கூறினார்.

தனியார் முதலீடுகள் குறைந்த போதிலும் அரசின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும் என்றார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் சிக்கலானது என்ற பொதுவான அபிப்ராயம் தற்போது தகர்க்கப்பட்டுவிட்டது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படையான தன்மை இந்தியாவில் இதுவரை கிடையாது. ஆனால் அதிலும் வெளிப்படைத் தன்மை உருவாக அரசு வழியேற்படுத்தியுள்ளது என்றார்.

அதேபோல மானியம் அளிப்பது தொடர்பாக நிலவி வந்த குழப்பங்களுக்கும் தீர்வு காணப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பிரத்யேக அடையாள எண் (ஆதார் எண்) அளிக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் தனி நபருக்கான மானிய உதவி எவ்வித குறுக்கீடும் என்றி, ஊழல் இன்றி பயனாளிகளைச் சென்று சேர வழி ஏற்பட்டுள்ளது.

மிக முக்கியமான வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் வரி விதிப்பில் உள்ள பன்முக நிலை மாறி ஒரு முனை வரி விதிப்பு அமலுக்கு வரும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கணிசமான பலனை ஏற்படுத்தும் என்றார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது மிகவும் கடுமையான நடவடிக்கையாகும். இதை செயல்படுத்த இந்திய அரசு பல தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது என்றார். இந்த நடவடிக்கையால் ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரித்துள்ளதோடு, அனைத்து நடவடிக்கைகளும் வங்கி மூலமாக நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்றம் தரும் நிகழ்வாக நிச்சயம் இருக்கும் என்றார் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in