

சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று வங்கிகள் விடுத்த கோரிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா விடுத்த கோரிக்கைக்கு வங்கிகள் பதில் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி விஜய் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனிடையே கடந்த ஜூலை 25-ம் தேதி இந்த வழக்கில் வங்கிகள் சார்பில் ஆஜரான அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹ்தகி, தொழிலதிபர் விஜய் மல்லையா தனது முழுமையான சொத்து விவரத்தை வெளியிடவில்லை. அதிலும் குறிப்பாக பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்ற 4.5 கோடி டாலர் தொகை பற்றி தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் இந்த விவரங்கள் சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் நீதிமன்றத்தை விஜய் மல்லையா அவமதித்துவிட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே மல்லையாவுக்குக் கடன் கொடுத்த எஸ்பிஐ உள்ளிட்ட 17 வங்கிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் விசாரணைக்கு மல்லையா ஒத்துழைப்பு தரவில்லை என்றும் சொத்து விவரங்களை முழுமையாக அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தன. குறிப்பாக வெளிநாட்டில் அவருக்குள்ள சொத்து பட்டியலை தாக்கல் செய்யவில்லை என்றும் கூறியிருந்தன.
நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்துக்கு பதில் அளித்து வங்கிகள், வெளிநாட்டில் மல்லையாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உள்ள சொத்து விவரத்தை வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தன.
ஆனால் 1988-ம் ஆண்டிலிருந்தே தான் வெளிநாடு வாழ் இந்தியராக (என்ஆர்ஐ) இருப்பதால் தனது வெளிநாட்டு சொத்து விவரங்களைக் கேட்க வங்கிகளுக்கு உரிமை கிடையாது என மல்லையா பதில் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வங்கிகள் தொடர்ந்தன. அதில் விஜய் மல்லையா மற்றும் அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் பெங்களூரில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்கும் முன்பாகவே அனைத்து சொத்துகளையும் விற்க முயற்சித்ததாகக் குறிப்பிட்டன.
2013-ம் ஆண்டு கடனை திருப்பி தராததால் வங்கிகளின் கூட்டமைப்பு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சொத்துகளை முடக்க கடன் மீட்பு தீர்ப்பாயத்தை அணுகியது குறிப்பிடத்கக்கது.
17 வங்கிகளின் கூட்டமைப்புக்கு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.9,091 கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டும். இது தொடர்பாக வங்கிகள் தொழிலதிபர் மல்லையாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன.