Last Updated : 21 Jun, 2017 03:40 PM

 

Published : 21 Jun 2017 03:40 PM
Last Updated : 21 Jun 2017 03:40 PM

மீண்டும் கேஜி டி-6-ல் எரிவாயு எடுக்க ரிலையன்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்வது ஏன்? - நிபுணர்கள் கருத்து

கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு எடுக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பது முதலீட்டாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதே படுகையில் 9 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ததில் 80 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர் எரிவாயு எடுத்திருக்க வேண்டும், ஆனால் இதில் 10-ல் ஒருபங்கு எரிவாயுவைக் கூட எடுக்கமுடியவில்லை. மேலும் இது தொடர்பாக அதிக செலவு காட்டியதற்காகவும், செலவுக்கேற்ற உற்பத்தியில்லாமல் குறைந்ததற்கும் வழக்குகளையும் சந்தித்து வரும் நிலையில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்துடன் சேர்ந்து மேலும் 6 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோவாட்ச் நிறுவனத்தின் தலைமை செயல் ஆசிரியர் மது நைனன் கூறும்போது, “நானும் ரிலையன்ஸின் முதலீட்டு அறிவிப்பைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன். 5 பில்லியன் டாலர்கள் தொகை வழக்கில் இருக்கும் போது மேலும் 6 பில்லியன் டாலர்கள் முதலீட்டை ரிலையன்ஸ் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் செய்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்ணயித்துள்ள விலை நிர்ணயத்தின்படி தற்போது கேஜி படுகையிலிருந்து வரும் எரிவாயு விலை மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுகளுக்கு 2.48 டாலர்களாகும். ஆனால் கடினமான உயர் வெப்பநிலை, உயர் அழுத்தப் பகுதிகள், ஆழ்கடல் மற்றும் சில கடினமான பகுதிகளில் எரிவாயு எடுத்தால் அதிக விலை கொடுக்க அரசு தயார் என்பதை நம்பி ரிலையன்ஸ் களமிறங்குவது போல் தெரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் படி மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 5.6 டாலர்கள் தொகை நிர்ணயிக்கப்படும். மத்திய அரசின் இந்த விலைக்கொள்கை திட்டவட்டமான ஒரு எச்சரிக்கையான முடிவு என்றே தெரிகிறது. இந்தப் புதிய விலைக்கொள்கை ஏற்கெனவே வழக்கில் உள்ள பிளாக்குகளுக்குப் பொருந்தாது.

எனவே ரிலையன்ஸின் இந்த புதிய முதலீட்டு முடிவு அந்நிறுவனத்துக்கு ரிஸ்க் என்றே மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் எச்சரிக்கிறது.

“திட்டமிடப்பட்ட இந்த முதலீடு இந்திய எரிவாயு வர்த்தகத்தில் ரிலையன்சின் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாம். ஆனால் கட்டுப்பாட்டு அனுமதிகளில் தாமதம் உள்ளிட்ட சவால்கள் ரிலையன்ஸுக்கு இருக்கிறது. மேலும் ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வின் மந்தகதி நகர்வு, கட்டுப்பாட்டு விதிகளில் பின்னோக்கிய காலத்திலிருந்து மாற்றங்களைக் கொண்டு வருவது போன்ற சவால்களையும் ரிலையன்ஸ் சந்தித்தாக வேண்டும். ஏற்கெனவே கட்டுப்பாட்டு ஆணையத்துடன் ரிலையன்ஸ் ஏற்கெனவே முதலீடு செய்த செலவினம் தொடர்பாக நடுவர் தீர்ப்பாயத்தை நாடியுள்ளது இந்நிலையில் புதிய முதலீடு சவாலானதே” என்கிறது மூடீஸ் இன்வஸ்டார்ஸ்.

மேலும் ஏற்கெனவே கேஜி டி-6 பிளாக்குகளில் உற்பத்தி 2010-ல் இருந்த 60 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்களிலிருந்து 2017-ல் 7.8 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்களாக குறைந்துள்ளது. இந்த சரிவுக்குக் காரணமாக ரிலியன்ஸ் நிறுவனம் எரிவாயுத் தேக்கத்தில் எதிர்பார்த்ததை விட சிக்கல்கள் அதிகமிருப்பதாகக் கூறியது. எனவே புதிய வயல்களிலும் இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட வாய்ப்புள்ளதால் ரிலையன்ஸ் எந்த அடிப்படையில் 6 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தது என்று மூடீஸ் இன்வஸ்டார்ஸும் கேள்வி எழுப்புகிறது.

இந்நிலையில் முதற்கட்ட முதலீட்டில் குறிப்பிட்ட முதலீட்டை ரிலையன்ஸ் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்திலிருந்த தனது 30% பங்குகளை விற்றதன் மூலம் திரும்பப் பெற்றது.

“ரிலையன்ஸ் தனது முதலீடுகளை திரும்பப் பெற்றுவிட்டது ஆனால் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் நிலை என்ன? எனவே அதிக விலை கொடுக்க அரசு முன்வந்தாலே தவிர ரிலையன்சின் இந்த புதிய முதலீட்டிற்கான காரணம் எதுவும் இல்லை” என்று பெட்ரோவாட்ச் கூறுகிறது.

ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இணைந்து 2020-ல் 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்கள் எரிவாயு உற்பத்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“3 புதிய வயல்களிலிருந்து 30 முதல் 35 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்கள் எரிவாயு உற்பத்தி சாதிக்க முடிந்தால் அது ஆண்டுக்கு சுமார் 2.2-2.5 பில்லியன் டாலர்கள் வருவாயை உருவாக்கும். இதில் ரிலையன்சின் பங்கு 1.3-1.5 பில்லியன் டாலர்களாக இருக்கும்” என்கிறது மூடீஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x