

வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களிடம் அதை வசூலிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கிகளின் வாராக் கடன் அளவு (என்பிஏ) அதிகரித்து வரும் நிலையில் சிதம்பரம் இத்தகைய அறிவுரையைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் வசூலில் உரிய கவனம் செலுத்த வேண்டும். வங்கிகளில் கடனைப் பெற்றுவிட்டு வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை அடையாளம் காண வேண்டும். அத்தகையோரிடமிருந்து கடனை வசூலிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கடன் வாங்கியவர்களின் நிலைமையை கருணையோடு பார்ப்பது வேறு: அதே சமயம் கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தாதவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது மிக அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடனை திரும்பச் செலுத்துவதற்கு போதிய நிதி வசதி இருந்தும் வேண்டுமென்றே திரும்ப செலுத்தாமல் இழுத்தடிக்கும் வாடிக்கையாளர்கள் விஷயத்தில் இனியும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. கடன் கொடுத்த வர்கள் கஷ்டப் படுவதற்கும், வாங்கியவர்கள் சௌகர்யமாக இருப்பதற்கு இனியும் அனுமதிக்கக் கூடாது என்றும் சிதம்பரம் சுட்டிக் காட்டினார்.
நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் அளவு 28.5 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. வங்கிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை 2.36 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 1.83 லட்சம் கோடியாக இருந்தது.
2011-ம் நிதி ஆண்டில் ரூ. 94,121 கோடியாக இருந்த வாராக் கடன் 2012-ல் ரூ. 1.37 லட்சமாகவும் இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ரூ. 1.83 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது.
வாராக் கடன் தொகையின் அளவு அதிகரித்ததற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகள் தொடர்ந்து செயல்பட மூலதனம் அவசியம். வங்கிகளின் செயல்பாட்டில் ஒரு பகுதியாக அரசு செயலாற்றும். வங்கிகள் தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ள தாங்களாகவே முயற் சிக்க வேண்டும். அத்துடன் லாபகரமானதாகவும் செயல்பட வேண்டும். 2011-12-ம் நிதி ஆண்டில் வங்கிகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியையும், 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ. 37,936 கோடியையும் மத்திய அரசு அளித்துள்ளது என்று குறிப்பிட்டார் சிதம்பரம்.
வங்கிகள் தாங்கள் ஈட்டிய லாபத்தில் எவ்வளவு தொகையை வங்கியில் மறு முதலீடு செய்ய உள்ளன என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டார். தாங்கள் ஈட்டிய தொகையில் ஒரு கணிசமான அளவை மறு முதலீடாக செய்யும் என தான் நம்புவதாகவும் கூறினார்.
முதலில் வங்கிகள் தங்களது பெரும்பான்மை பங்குதாரர்கள் மற்றும் சிறிய பங்குதாரர்களுக்கான ஈவுத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றார்.
வங்கிகள் சர்வதேச விதிமுறையான பேசல்-2 என்ற நிலையை எட்ட வேண்டும். இப்போது நமது வங்கிகள் பேசல்-3 நிலையை எட்டியுள்ளன. 2018-ம் ஆண்டுக்குள் வங்கிகள் அனைத்தும் பேசல்-3 நிலையை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க அரசு தனது பங்களிப்பாக கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது.
எதிர்காலத்தில் வங்கிகள் சிறப்பாக செயல்பட அதிக முதலீடு தேவை. இதை வங்கி அதிகாரிகள், பணியாளர்கள் நன்கு உணர்ந்து திரட்டப்படும் வருவாயில் ஒரு பகுதியை முதலீடாக மாற்ற முயற்சிக்க வேண்டும். வரி மற்றும் டிவிடெண்ட் அளித்ததுபோக மீதித் தொகையில் ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டும்என்றார் சிதம்பரம்.