Published : 03 Mar 2014 11:47 AM
Last Updated : 03 Mar 2014 11:47 AM

சஹாரா விவகாரம்:வெளிநாடுகளின் உதவியை நாடுகிறது `செபி’

சஹாரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள முதலீட்டாளர்கள் பற்றிய விவரம் போலியானதாக இருக்கும் என்று பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) கருதுகிறது. இது குறித்து விசாரிக்க வெளிநாடுகளின் உதவியைக் கோர முடிவு செய்துள்ளது.

சஹாரா குழுமம் தாக்கல் செய்துள்ள முதலீட்டாளர்கள் பட்டியலில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உண்மையான முதலீட்டாளர்கள் இருப்பார்கள் என செபி கருதுகிறது. சஹாரா குழுமத்தின் சொத்துகளை முடக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகளின் உதவியை கடந்த ஓராண்டாக செபி கோரிவந்த போதிலும் அதில் போதிய முன்னேற்றம் எட்டப்படவில்லை. இதனால் வெளிநாடுகளின் உதவியை செபி நாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்போது போலீஸ் காவலில் உள்ள சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் இம்மாதம் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே மொரீ ஷியஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து உதவியை செபி நாட உள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் பல்வேறு முதலீடுகளை சஹாரா குழுமம் மேற்கொண் டிருப்பதாகத் தெரிகிறது.

இம்மூன்று நாடுகளின் பங்குச் சந்தைகள் மூலம் சஹாரா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை செபி கோரியுள்ளது. 3 கோடி முதலீட்டா ளர்கள் குறித்த விவரத்தை சஹாரா குழுமம் அளித்திருந்தாலும், அன்னியச் செலாவணி மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கலாம் என செபி சந்தேகிக்கிறது.

மூன்று கோடி முதலீட்டாளர்கள் பட்டியலை சஹாரா நிறுவனம் அளித்திருந்தாலும் அதில் சில லட்சம் பேர்தான் உண்மையான முதலீட்டாளர்களாக இருப்பர் என்று செபி நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சஹாரா நிறுவனம் முதல் தவணையாக அளித்த ரூ. 5,120 கோடி இப்போது செபி வசம் உள்ளது. இதை திருப்பி அளிப்பதற்கு சிறப்பு அதிகாரியை செபி நியமித்துள்ளது.

இதுவரை 21 ஆயிரம் முதலீட்டாளர்களுக்கு தொகையை திருப்பி அளிப்பது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் 300 பேர் மட்டுமே தொகையை பெற்றுச் சென்றுள்ளனர். 7,000 கடிதங்கள் முகவரியில் யாரும் இல்லை என திரும்பி வந்துள்ளது. 13 ஆயிரம் கடிதங்களுக்கு எவ்வித பதிலும் வரவில்லை.

இதனிடையே சஹாரா கிரெடிட் கூட்டுறவு சங்கத்துக்கு (ரூ. 13,366 கோடி), சஹாரா இந்தியா கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (ரூ. 4,384 கோடி), சஹாரா க்யூ ஷாப் (ரூ. 2,258 கோடி), கேடக் சிட்டி ஹோம்ஸ் (ரூ. 19 கோடி), கிரீட் சிட்டி ஹோம்ஸ் (ரூ. 44 கோடி) தொகை சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரத்தை அளிக்குமாறு செபி சஹாரா குழுமத்தைக் கேட்டுள்ளது.

சஹாரா குழுமம் திரட்டிய ரூ. 20 ஆயிரம் கோடி தொகையில் உண்மையான முதலீட்டாளர்கள் அல்லாமல் போலியாக காட்டப்பட்டிருந்தால் அந்தத் தொகை அரசுக்கு சென்று விடும்.

இதனிடையே கடந்த 17 மாதங்களாக முதலீட்டாளர் பட்டியலில் ஒருவரைப் பற்றி கூட செபி இதுவரை விசாரிக்கவில்லை என்று சஹாரா குழுமம் குற்றம் சாட்டியுள்ளது. ஆவணங்களின் அளவு 30 லாரிகள் தேறும். இவை அனைத்தும் சஹாரா குழுமத்தின் கோடவுனில் உள்ளது. இதை இதுவரை செபி ஏற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மே 2013-லிருந்து முதலீட்டாளர் களுக்கு இதுவரை ரூ. 1 கோடி மட்டுமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சஹாரா குழுமம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x