அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியை தவிர்த்து விட்டு தொழில் செய்ய முடியாது...

அறிவோம் ஜிஎஸ்டி: ஜிஎஸ்டியை தவிர்த்து விட்டு தொழில் செய்ய முடியாது...
Updated on
2 min read

ஜிஎஸ்டி சட்டம் குறித்து வர்த்தகர்களுக்கு உள்ள சந்தேகங்களை விளக்கும் விதமாக ‘தி இந்து தமிழ்' தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பயிலரங்கங்களை நடத்தியது. இதில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் வாசகர்கள் இமெயில், கடிதங்கள் மூலமாக கேட்ட சந்தேகங்களுக்கு ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ அளிக்கும் விளக்கங்கள் இந்த பகுதியில் வெளியிடப்படுகின்றன.

ஜிஎஸ்டி சட்டம் திட்டமிட்டபடி நடைமுறைக்கு வந்துவிடுமா?

ஜூன் 30-ம் தேதி நள்ளிரவிலிருந்து ஜிஎஸ்டி என்கிற சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்த இந்த சட்டம் கிட்டத்தட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி சட்டத்துக்கான முன்னேற்பாடுகளை இந்தியா முழுவதும் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் ஆர்வமுடன் மேற்கொண்டாலும் பலரிடமும் புதிய வரி விதிப்பு குறித்த தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ஆரம்ப சிக்கல்களை அமல்படுத்திய பிறகு சரி செய்து கொள்ளலாம் என்கிற மனநிலையில்தான் மத்திய அரசும் உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களிலேயே மிக முக்கியமான வரிச் சீர்திருத்தம் ஜிஎஸ்டி. இதை ஆரம்பத்தில் சில மாநிலங்கள் எதிர்த்தாலும், மெல்ல மெல்ல தற்போது அனைத்து மாநிலங் களும் ஏற்றுக் கொண்டுவிட்டன. மாற்று யோசனைகளுக்கு ஏற்ப ஜூலை மாதம் தாக்கல் செய்ய வேண்டிய வரி கணக்குகளை செப்டம்பர் மாதத்தில் தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு வர்த்தகர்களுக்கு சில சலுகை நாட்களையும் வழங்கியுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சட்டத்தை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் தவிர்த்து விட்டு தொழில் செய்ய முடியாது என்பதே நிலைமை.

தற்போதுள்ள வரி முறைகளுக்கும் ஜிஎஸ்டிக்கும் வித்தியாசம் என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி, நுழைவு வரி போன்ற பல்வேறு வரிகளும், கூடுதல் வரிகளும் உள்ளன. மேலும் இவற்றை உற்பத்திப் பொருளின் பல நிலைகளில் செலுத்த வேண்டும். அதாவது ஒரு பொருளை தயாரித்து அல்லது உற்பத்தி செய்து அதை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வரையிலும் பல்வேறு வரிகளை மத்திய, மாநில அரசுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு மாதிரியான வரி விதிப்புகள் உள்ளன. இதையெல்லாம் தவிர்த்து உற்பத்தி பொருளுக்கு ஒரே இடத்தில் ஒரே வரி விதிப்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி. தற்போதுள்ள பல விதமான வரி முறைகளுக்காகவும் தனித் தனியாக அரசு துறைகள் செயல்படுகிறது. துறை ரீதியான ஒருங்கிணைப்பில் ஏற்படும் குழப்பங்களுக்கும் இந்த சட்டம் தீர்வாக இருக்கும்.

இந்த சட்டத்தால் உடனடி ஆதாயம் யாருக்கு?

ஜிஎஸ்டி காரணமாக உள்ளீட்டு வரி வரவினை பெறமுடியும். ஜிஎஸ்டியினால் ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருட்களை வாங்கும்போது ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்குவார் என வைத்துக் கொள்வோம். உற்பத்திக்குப் பிறகான விற்பனையில் பெறப்படும் ஜிஎஸ்டி வரியை இவர் மூலப்பொருளுக்கு செலுத்திய வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.

மேலும் நுகர்வோருக்கும் இதன் பலன் சேரும். ஏனென்றால் இதுவரை மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்தும் பல்வேறு வரிகளின் அளவானது உற்பத்தி செலவைவிட அதிகமாக உள்ளது. இப்படி அதிகமாகச் செலுத்தும் வரித் தொகை உற்பத்தி பொருளின் விலையில்தான் சேர்கிறது. ஆனால் இப்போது ஒரே வரி என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை. இதன் பலன் நுகர்வோருக்குச் சேர வேண்டும். அதை அரசு உறுதிபடுத்தும்.

இந்த சட்டத்தால் உடனடி பாதிப்பு யாருக்கு?

உடனடி பாதிப்பு என்று பார்த்தால் ஓய்வூதிய தாரர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் இவர்கள் இருக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த நிலையில் இவர்களுக்கான சேவைகளுக்கு வரி அதிகரிக்கும் பட்சத்தில் பாதிக்கப்படுவார்கள். இன்ஷூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்டு இ.எம்.ஐ, வீட்டுக் கடன் இ.எம்.ஐ, வாடகை போக்குவரத்து, ஓட்டல் செலவுகள் என அனைத்துமே அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் அனைவருக்கும் உடனடி பாதிப்புகள் இருந்தாலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரி மற்றும் வரி விலக்குகளும் இருக்கின்றன. எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்ட பிறகே தெரிய வரும்.

இதுவரை வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர் களுக்கும் இது பொருந்துமா?

இதுவரை வரிக் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்த தொழில்துறையினர் அனைவரும் ஜிஎஸ்டியில் இணைய வேண்டும். வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் இல்லையென்றாலும் அதை தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக இதுவரை முறையான வரி செலுத்தாமல் இருந்த சிறு குறு தொழில் நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தி தொழில் செய்ய வேண்டிய சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. ஆனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பொருளை அனுப்பும்போது இருந்த பல வரிகள் ஜிஎஸ்டியில் இருக்காது. இதனால் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதாயம்தான். ஜிஎஸ்டி வரும்போது பொருள் சேமிப்பு கிடங்குகளின் தேவையும் குறையும் என்பதால் நிறுவனங்களின் பொருள் சேமிப்பு செலவு வெகுவாகக் குறையும் வாய்ப்புள்ளது.

தொடரும்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in