Last Updated : 24 Aug, 2016 08:31 AM

 

Published : 24 Aug 2016 08:31 AM
Last Updated : 24 Aug 2016 08:31 AM

செல்வந்த நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 7 வது இடம்

உலக அளவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட செல்வந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 7 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பெரும் செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 5,60,000 கோடி டாலர்களாகும். அதிக செல்வந்தர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

`நியூ வேர்ல்டு வெல்த்’ என்கிற அமைப்பின் அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத் தில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களில் தனிப்பட்ட சொத்து மதிப்பு 48,90,000 கோடி டாலர்களாகும். இதற்கு அடுத்து சீனா உள்ளது. சீன செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 17,40,000 கோடி டாலர்களாகும். மூன்றாவதாக ஜப்பான் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 15,10,000 கோடி டாலர்களாகும்.

7 வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு அடுத்து கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் இடம் பிடித்துள்ளன. 8-வது இடத்தில் உள்ள கனட செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 4,70,000 கோடி டாலர்களாக உள்ளது. 9-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து 4,50,000 கோடி டாலர்களாகவும், பத்தாவதாக உள்ள இத்தாலி பணக்காரர்களின் சொத்து மதிப்பு 4,40,000 கோடி டாலர்களாகவும் உள்ளன என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

பட்டியலில் 4-வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 9,20,000 டாலர்களாக இருக்கிறது. அதற்கடுத்து ஜெர்மனி பணக்காரர்களின் சொத்து 9,10,000 கோடி டாலர்களாகவும், பிரான்ஸ் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 6,60,000 கோடி டாலர்களாகவும் உள்ளன.

இந்த பட்டியல் பெரும் செல்வந்தர்களின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக செல்வந்தர்களின் கட்டிடங்கள், ரொக்கம், பங்கு மதிப்புகள், மேற்கொண்டிருக்கும் தொழில்கள் அடிப்படையிலும், அவர்களது கடன்கள் மதிப்பை கழித்தும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செல்வந்தர்கள் அரசு சார்ந்த பாண்டுகள் மற்றும் முதலீட்டு முயற்சிகளில் மதிப்பை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. அதே சமயத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகைக் கொண்ட ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது சுவராஸ்மானது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் தொகை 2.2 கோடி பேர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

பெரும் பணக்காரர்கள் உருவாவதில் சீனாவின் வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் அபரிமிதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வலுவானதாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியாவும், கனடாவும் இத்தாலியை முந்தியுள்ளன.

செல்வந்தர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு அடிப்படையில் மதிப்பிடப்படும் இந்த செல்வந்த நாடுகளின் பட்டியல் ஜூன் 2016 நிலவரப்படி மதிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x