வரையறுக்கப்பட்ட சிறந்த பட்ஜெட்: எஸ்ஐசிசிஐ கருத்து

வரையறுக்கப்பட்ட சிறந்த பட்ஜெட்: எஸ்ஐசிசிஐ கருத்து
Updated on
2 min read

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மிகவும் வரையறுக்கப்பட்ட சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்று தென்னிந்திய தொழில் வர்த்தக சபை (எஸ்ஐசிசிஐ) கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையில் பட்ஜெட் குறித்த கலந்துரையாடலில் இதன் தலைவர் ரபீக் அகமது கூறியதாவது: புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு செலவுகளை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் கிராமப்புற பொருளாதாரம் மேம்படவும், விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தோல் மற்றும் காலணித் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்துறைதான் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. இதற்கு கூடுதல் சலுகை அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும். தற்போதைய சூழலில் மிகச் சிறப்பான பட்ஜெட் இது. இதில் உள்ள சாதக அம்சங்களை மாநிலங்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கணபதி, மூத்த துணைத் தலைவர்: எந்தவொரு பட்ஜெட்டும் அனைத்துத் தரப்பினரையும் திருப்தி செய்ய முடியாது. இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட். கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித் துறை குறிப்பாக குறைந்த விலை வீடுகட்டுவது ஊக்கு விக்கப்பட்டுள்ளது. எப்ஐபிபி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்நிய முதலீடுகள் வரக்கூடும்.

ராம், தணிக்கையாளர்: புதிய உத்திகள் பலவற்றை உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை என்பது 130 நாள்களாக அதிகரிப்பதன் மூலம் கிராப்புற பொருளாதாரம் உயரும். அதேசமயம் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்க புதிய வழிகள் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு சங்கல்ப், ஸ்டிரைவ் எனும் இரண்டு திட்டங்களுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு எங்கு பணம் பதுங்கியுள்ளது என்பதை அரசு கண்டுபிடித்துள்ளது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளன. வரியை வசூலிப்பதற்கான வழியை அரசு இப்போது சரியாகக் கணித்துள்ளது என்று தெரிகிறது.

பார்மா, சுற்றுலா, ஜவுளி, தோல்துறை, சூரிய ஆற்றல், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாட்டின் பொருளாதாரம் நான்கு முக்கிய காரணிகளில் சுழல்கிறது. 1. அரசு முதலீடு, 2. தனியார் முதலீடு, 3, தனியார் நுகர்வு, 4. ஏற்றுமதி. பல்வேறு காரணிகளால் தனியார் முதலீடு குறைந்துவிட்டது. ஏற்றுமதியில் தேக்க நிலை நிலவுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தனியார் நுகர்வு குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் அரசு முதலீட்டை அதிகரிப்பதன் மூலம்தான் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதை சரியாக மேற்கொண்டிருக்கிறார் ஜேட்லி என்று பல உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in