Published : 10 Jan 2014 10:17 AM
Last Updated : 10 Jan 2014 10:17 AM

இந்தியாவில் முதலீடுகளை பாதிக்கும் மானியங்கள் - பிரட்டிஷ் பொட்ரோலியம் நிறுவனத் தலைவர் தகவல்

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் அன்னிய முதலீட்டுக்கான சூழலை வெகுவாக பாதிப்பதாக பிரிட்டிஷ் பெட்ரோ லியம் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் சஷி முகுந்தன் தெரிவித்தார்.

2030-ம் ஆண்டில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகத் திகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் எரிபொருள் தேவை மூன்றுமடங்கு அதிகரிக்கும். எனவே இத்துறையில் முதலீட்டுக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்தியாவில் முதலீடு செய்வதில் பல்வேறு சவால்கள் உள்ளன. இங்கு தொழில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லை. கட்டமைப்புத் துறையில் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் மற்றும் எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன. இவையனைத்துமே ஒட்டுமொத்தமாக முதலீடுகளை பாதிக்கும் குறிப்பாக அன்னிய முதலீடுகளைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

எண்ணெய், எரிவாயு வயல்களை ஏலம் விடுவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் முகுந்தன் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் 720 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேற்கொள்ளும் பல்வேறு எண்ணெய் அகழ்வு திட்டப் பணியில் 30 சதவீதம் வரை முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனம் இதற்கான அனுமதி யைப் பெறுவதில் அனாவசியமாக கால தாமதம் ஆகிறது.

இத்தகைய கால தாமதம் காரணமாக கிருஷ்ணா கோதாவரி படுகையில் டி-6 எண்ணெய் வயலில் அகழ்வுப் பணி மேற்கொள்வதில் அதிக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் எரிவாயு விலை நிர்ணயம். அதாவது இறக்குமதி செய்யப்படும் விலையில் நான்கில் ஒரு பங்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் பல்வேறு திட்டப்பணிகள் பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாமல் போனதற்கு முக்கியக் காரணமாகும்.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாக வேண்டும் என்றால் அதற்குரிய வகையில் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட பகுதியில்தான் செயல்பட வேண்டும் என்று வரையறை செய்ய முடியாது. பெருகிவரும் எரிசக்தி தேவையை ஈடுகட்டும் வகையில் கொள்கை இருக்க வேண்டும். இத்தகைய தேவையை ஒரு நிறுவனம் மட்டுமே ஈடுகட்ட வேண்டும் என நினைப்பது மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக உள்ளது என்று முகுந்தன் கூறினார்.

இந்தியாவில் உள்ள ஹைட்ரோகார்பன் படிமங்களின் வளத்தை உண்மையாகக் கண்டுணர்ந்து அதற்கேற்றபடி கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதேபோல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் முக்கிய பங்காற்ற முடியும் என்று நம்புகிறது என்று முகுந்தன் கூறினார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் அகழ்வு என்பது பல்வேறு சவால்களை உள்ளடக்கியிருப்பதோடு நிறைய வாய்ப்புகளையும் கொண்டிருக் கிறது என்று மேலும் கூறினார்.

இப்போது மிகவும் சிக்கலான சூழலில் நாம் உள்ளோம். எரிவாயு மற்றும் எண்ணெய் அகழ்வில் இன்னும் கண்டறியப்படாத வயல்கள் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் எண்ணெய், எரிவாயு வை சேமிப்பதற்கான முதலீடு, குழாய்ப்பாதை, இறக்குமதி, அதை விநியோகித்தல் போன்றவற் றுக்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பொருளாதாரம் வளரும்போது அதற்கேற்ப எரிசக்தி தேவையும் அதிகரிக்கும். அதை ஈடுகட்ட வேண்டியது மிகவும் அவசியம். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது எரிசக்தி என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இதைக் கருத்தில் கொண்டு இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x