

‘மில்க் டு மணி என்ற திட்டத்தின் கீழ் எச்.டி.எஃப்.சி. வங்கி நாடு முழுதும் சுமார் 1,200 பால் கூட்டுறவு நிலையங்களை டிஜிட்டல்மயப்படுத்தியுள்ளது.
இதனால் 16 மாநிலங்களில் உள்ள சுமார் 3.2 பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள், என்று எச்.டி.எஃப்.சி. வங்கி செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
2010-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எம்டுஎம் திட்டம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் அமைப்பு ரீதியான வங்கி நடவடிக்கைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பால்பொருள் உற்பத்தி-விற்பனை சங்கிலியை டிஜிட்டல்மயமாக்கியதால் அனைத்துப் பால்பொருட்கள் குறித்த நடவடிக்கைகளும் வங்கி நடவடிக்கைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அவர்களது பணம் மற்றும் வங்கித் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாக எச்.டி.எஃப்.சி. தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டத்தினால் பால்பொருள் உற்பத்தியாளர்களின் பணப்புழக்கம் அதிகரித்ததோடு இந்தத் தொழிலில் உள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் திறன் கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் வேளாண் வர்த்தக தலைவர் மைக்கேல் ஆன்ட்ரேட் கூறும்போது, “இந்தியாவின் 2-வது வெண்மைப் புரட்சியை சாதித்துள்ளோம் என்றே நாங்கள் கருதுகிறோம். இது பால் விவசாயிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது” என்றார்.
எம்டுஎம், தற்போது குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், உ.பி., பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், பிஹார், அசாம், மேகாலயா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு இத்திட்டம் உத்வேகம் பெற்று நவம்பர் 2016-க்குப் பிறகு கூட்டுறவு அமைப்புகளில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று எச்.டி.எஃப்.சி. தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.