

அரசின் நான்கு முக்கிய பணிகள் பொருளாதார வளர்ச்சி, (Allocation), பகிர்வு (Distribution). பொருளாதார நிலைத்தன்மை ( Stability) மற்றும் சந்தைக் கட்டுபாடு (Market Regulation) என முன்பு பார்த்தோம்.
இது போன்ற பணிகளைச் செய்ய அரசுக்கு வருவாய் மிகவும் அவசியம். ஒரு பொருளை சந்தையில் வாங்க அதற்கான விலையை கொடுக்கிறோம். அரசு வழங்கும்போது பொருள்களுக்கும் பணிகளுக்கும் அப்படி நேரடியாக விலை எதுவும் கொடுக்காமல் நாம் எல்லோரும் சேர்ந்து வரியாகச் செலுத்துகின்றோம்.
இந்த வரி மக்களின் ஒரு கட்டாய பங்களிப்பு ஆகும். இதைக் கொண்டுதான் அரசு தனது பொது செலவுகளை செய்கின்றது. இதுபோன்ற அரசின் வருவாயும் செலவும் பற்றியதுதான் பட்ஜெட் ஆகும்.
அரசின் வருவாய் பொதுவாக மூன்று முக்கிய வழிகளில் பெறப்படுகின்றது. ஒன்று, வருமான வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) போன்ற அனைத்து வரி வருவாய்கள். இரண்டு, பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் மற்றும் உபரி, ஈவுத்தொகை, அரசு பணிகளுக்கான கட்டணம், அரசு விதிக்கும் அபராதத்தொகை, அரசு வழங்கிய கடன்களில் இருந்து கிடைக்கும் வட்டி போன்ற வரியில்லாத வருவாய்கள். மூன்று, அரசு பெரும், கடன், போன்ற மூலதன வருவாய்கள்.
வரி வருவாய்கள்
இந்த மூன்றிலும் மிக முக்கியமானது அரசின் வரி வருவாய்கள் ஆகும். உதராணமாக, 2010-11 நிதியாண்டில், மத்திய மாநில அரசுகளின் ஒட்டுமொத்த வருவாய் நாட்டில் GDP யில் கால் பங்கிற்கு சற்று அதிகமாகும் (27.6 சதவீதம்); நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத்துறையின் அளவாகவும் இதைக் கொள்ளலாம்.
இந்த ஒட்டுமொத்த அரசு வருவாயில், பெரும்பான்மை (58 சதவீதம்) வரி வருவாயும், 15 சதவீதம் வரியில்லாத வருவாய்களும், மீதமுள்ள 27 சதவீதம் அரசின் கடன் போன்ற மூலதன வருவாய்களும் ஆகும்.
நாட்டின் மொத்த வரி வருவாயினை வேறுவிதமாகவும் சொல்லலாம். அதாவது, நாட்டு வருமானத்தின் ஒவ்வொரு நூறு ரூபாயிலும், 16 ருபாய் வரியாக (2010-11 நிதியாண்டில்) மத்திய மாநில அரசுகளால் பெறப்பட்டுள்ளன. நமது கூட்டாட்சி முறையில் வரி விதிப்பு முறை மூன்று அடுக்குகளைக் கொண்டது.
மிக முக்கியமான வரிகள் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளும் ஒரு சில வரிகளை விதிக்கின்றன. வரி வருவாய்களை நேரடி வரி மறைமுக வரி எனவும் வகைப்படுத்தலாம்.