

தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 0.4 சதவீதமாக ஆகஸ்ட் மாதத்தில் உயர்ந்திருக்கிறது. உற்பத்தி துறையின் மந்தமான நிலைமை மற்றும் நுகர்வோர் பொருட்கள் பெரிய அளவில் விற்பனையாகாததுமே இதற்குக் காரணம்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமும் தொழில் உற்பத்தி குறியிடு 0.4 சதவீதம் என்ற நிலையிலே இருந்தது. தவிர கடந்த ஜூலை மாதமும் தொழில் உற்பத்தி குறியீடு 0.5 சதவீதம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மறு மதிப்பீட்டில் 0.41 சதவீதம் என்ற நிலைமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் தொழில் உற்பத்தி குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
ஐஐபி குறியீட்டில் உற்பத்தி துறையின் பங்கு 75 சதவீதமாகும். இது ஆகஸ்ட் மாதத்தில் 1.4 சதவீதம் சரிந்திருக்கிறது. ஆனால் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி துறை 1.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.1 சதவீதம் சரிந்தது.
தொழில் உற்பத்தி குறியீட்டில் மொத்தம் 22 துறைகள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 11 துறை குறியீடுகள் உயர்ந்தும், 11 துறை குறியீடுகள் சரிந்தும் முடிவடைந்தன.