Published : 04 Sep 2016 11:22 AM
Last Updated : 04 Sep 2016 11:22 AM

தொழில் ரகசியம்: ஆமாம் போடும் ஆசாமிகளை அருகில் சேர்க்காதீர்கள்

வடக்குப்பட்டி ராமசாமியிடம் கொடுத்த கடனை வசூல் செய்ய நரி முகத்தில் முழித்துச் சென்றால் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று யாரோ சொன்னார் என்று அப்படியே செய்து போகும் வழியில் சைக்கிள் டயர் பஞ்சராகியும், செருப்பு அறுந்தும், கால் விரலில் அடிபட்டும் ‘நரி முகத்தில் முழித்திருப்பதால் பணம் வந்துரும்’ என்று கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் சென்று மொத்தமாய் மோசம் போவதை என்னவென்று கூறுவது?

காமெடி என்று கூறலாம், வயித்தெரிச்சல் என்றும் கூறலாம். உளவியலில் இதை ‘உறுதிப்படுத்தல் சார்புநிலை’ (Confirmation bias) என்கிறார்கள்.

கிடைக்கும் புதிய தகவல், விஷயங்கள், செய்திகளை நாம் நம்பும் கோட்பாடுகள், தீர்வுகள், நம்பிக்கைகளுக்கு ஏற்ப மட்டுமே பொருள்படுத்திப் பார்க்கிறோம். புதிய தகவல் நம் கண்ணோட்டத்துக்கு மாறாக இருப்பின் உதாசீனப்படுத்துகிறோம், நாம் நினைத்திருப்பதற்கு ஏற்ற செய்திகளை மட்டுமே ஏற்கிறோம். இதுவே உறுதிப்படுத்தல் சார்புநிலை.

உணர்வு பூர்வமான விஷயங்களில் அதீத நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் இதை அதிகம் காணலாம். தனது இடுப்பிற்கு கீழ் பார்க்க முடியாத அளவிற்கு விழுந்த தொப்பையை குறைக்க தினம் வாக்கிங் போகிறவர்கள் உடம்பு இளைப்பதாக நம்புகிறார்கள். பாண்ட் வாங்க கடையில் அளவெடுக்கும் போது பழைய அளவே இருக்கிறதென்றால் கடைக்காரனுக்கு அளவெடுக்கத் தெரியவில்லை என்று நினைப்பார்களே ஒழிய தங்கள் உடம்பு இன்னமும் இளைக்கவில்லை என்பதை உணர மறுப்பார்கள். இதே கதைதான் மத நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட எண்ணங்களிலும்.

பொதுவாகவே சொல்வதை தட்டிக் கேட்காத ஆமாம் போடும் ஆசாமிகள் அருகில் இருப்பதையே விரும்புகிறோம். அப்படி ஆமாம் போடும் ஆசாமி நமக்குள்ளேயே இருந்தால் பிடிக்காமல் போய்விடுமா என்ன!

இதற்கு இன்னொரு விளக்கமும் உண்டு. செய்த தவறை மனித மனம் லேசில் ஏற்றுக்கொள்வதில்லை. உண்மை என்று பல நாள் நினைத்த ஒன்றைத் தவறு என்று சாட்சியங்களும் தகவல்களும் கூறும்போது இத்தனை நாள் நினைத்தது தவறு என்று ஏற்றுக் கொள்ள மனம் விரும்புவதில்லை. அதனால் புதிய தகவலை பழைய கண்ணோட்டத்துடனேயே அணுகி நினைத்திருந்ததற்கு ஏற்றவாறு மனம் பொருள்படுத்தி தான் நினைத்திருந்ததே சரி என்கிறது. பூலோகம் இருண்டு விட பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் போதாதா!

இக்கோட்பாட்டை ஆய்வுகள் மூலம் விளக்கியவர் இங்கிலாந்து உளவியலாளர் ‘பீட்டர் வாசன்’. ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு வரிசையாக எழுதப்பட்டிருந்த மூன்று எண்கள் தந்தார். ஒரு விதிப்படி அமைந்திருக்கும் எண்களை அலசி அது என்ன விதி என்று சரியாய் சொல்லவேண்டும் என்பதே ஆய்வு. ஆய்வில் கலந்துகொண்டவர்கள் விதியை சரியாக கணிக்க அடுத்த எண்ணை யூகித்து கேட்கலாம். விதிப்படி அமைகிறதா இல்லையா என்று பீட்டர் பதிலளிப்பார். எத்தனை முறை வேண்டுமானாலும் எண்களை யூகித்துக் கேட்கலாம். ஆனால் விதி என்ன என்பதை சரியாய் கூற ஒரு சந்தர்ப்பம் மட்டுமே அளிக்கப்படும்.

உதாரணத்திற்கு காகிதத்தில் 2 4 6 என்ற எண்கள் எழுதப்பட்டிருந்தால் ஆய்வில் கலந்துகொண்டவர்கள் விதியை கணித்து அடுத்த நம்பர் எட்டா என்று கேட்பார்கள். பீட்டர் ஆமாம் என்பார். உடனேயே ‘கடைசி எண்ணுடன் இரண்டை கூட்டுவதே விதி’ என்றார்கள். ’விதி அதுவல்ல’ என்பார் பீட்டர்.

மற்றவர்கள் கூறிய விதி தவறு என்று தெரிந்தும் அடுத்து வருபவர்கள் அதே விதிப்படி யூகித்து இரண்டை கூட்டினால் வருவது, அடுத்த நம்பர் இரண்டால் வகுபடக் கூடியது என்றே கூறினார்கள். அவை அனைத்துமே தவறானவை, தான் நினைத்த விதி அல்ல என்றார் பீட்டர். தாங்கள் ஒரு விதியை முடிவு செய்து அதன்படி மட்டுமே அனைவரும் அணுகியதால் புதிய, சரியான கோணத்தில் சிந்திக்கவில்லை அனைவரும்.

உறுதிப்படுத்தல் சார்புநிலையில் இப்படித்தான் தினம் விழுகிறோம். ஒரு அரசியல் கட்சியை கண்மூடி ஆதரிக்கிறோம். அக்கட்சி பற்றி கிடைக்கும் புதிய தகவல், அக்கட்சியின் செய்கை முதலியவை அக்கட்சி சரியல்ல என்று சுட்டிக்காட்டினாலும் பெற்ற தகவலை, செய்கையை நம் கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு பார்த்து அக்கட்சியை தொடர்ந்து ஆதரிக்கிறோம்.

பங்குச் சந்தையில் அலசி ஆராய்ந்து ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதன் பங்கு மதிப்பு உயரும் என்று நம்பி வாங்கி அதன் விலை குறைந்தாலும் சரியாகிவிடும் என்று கூறுவோம். அந்த நிறுவனம் பற்றிய எதிர்மறை தகவலைக் கூட நம் ஆதரவு நிலைக்கேற்ப மட்டுமே பார்த்து ‘கண்டிப்பாய் ஏறும்’ என்று காத்திருப்போம். நிறுவனத்தின் பங்கு விலை அந்தர் பல்டியடித்து அதளபாதாளத்தில் விழும் வரை காத்திருந்து பிறகு ஒப்பாரி வைப்போம்!

உலகப் புகழ் பெற்ற முதலீட்டாளர் ‘வாரன் பஃபெட்’ ஆண்டுதோறும் நடக்கும் தன் நிறுவன கூட்டத்திற்கு தன் கருத்துகளை எதிர்க்கும் நிபுணர்களை அழைத்து பேசச் சொல்வார். ஏன் அப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் ‘என்னை ஆமோதிப்பவர்கள் பேச்சை மட்டுமே எதற்குக் கேட்டுக்கொண்டு, என் தவறை சுட்டிக்காட்டும் ஆட்களும் அவர்கள் தரும் புதிய தகவலும் அல்லவா எனக்குத் தேவை’ என்பார்!

பரிணாம தத்துவம் படைத்த ‘சார்ல்ஸ் டார்வின்’ தான் உறுதியாக எண்ணிய எண்ணங்களுக்கு எதிரான தகவல் ஏதேனும் கிடைத்தால் அதை உடனேயே தன் டைரியில் எழுதி வைப்பாராம். இல்லையென்றால் தன் எண்ணங்களுக்கு மாற்றான கருத்து என்று மனம் அதை மறக்கும், மறுக்கும் என்பதற்காக!

சார்ல்ஸ் டார்வின், வாரன் பஃபெட் போன்ற மேதைகளே இந்த சார்புநிலைக்கு ஆளாகிறவர்கள் என்றால் நம்மைப் போன்ற சாமானியர்கள் இதிலிருந்து எப்படி தப்பிப்பது?

முதல் காரியமாக ஈகோவை தூக்கி எறியுங்கள். தவறு செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மனம் வருவதில்லை. அதை மறுத்து முன்னேற நினைப்பதால் தான் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வழுக்கி விழுகிறோம். நினைத்த விஷயம், நம்பிய கோட்பாடுகள் தவறாக இருக்கலாம் என்று பரந்த மனதுடன் கிடைக்கும் தகவலை அதன் கோணத்தில் பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். ‘உதாசீனப்படுத்தப்படுவதால் மட்டுமே உண்மை மறைந்துவிடாது’ என்று ‘ஆல்டஸ் ஹக்ஸ்லி’ கூறியதை நினைவில் நிறுத்துங்கள்.

அருகில் ஆமாம் போடும் சாமிகளை மட்டுமே நிரப்பாதீர்கள். உங்கள் எண்ணங்களோடு ஒத்துப் போகாதவர்களை கேள்வி கேட்க ஊக்குவியுங்கள். மாற்றுக் கருத்துகளை பயமில்லாமல் பகிரும் டெவில்ஸ் அட்வகேட்டுகளை (Devil’s advocate) டெவலப் செய்யுங்கள்.

ஒரு காரியத்தை செய்த பின் மற்றவர்களிடம் ‘நான் செய்தது சரி தானே’ என்று கேட்காதீர்கள். கேட்கும் தோரணையே ‘மரியாதையாக சரி என்றே சொல்’ என்பது போல் இருக்கிறது. ‘இன்னமும் எப்படி சிறப்பாக செய்திருக்கலாம்’ என்று கேளுங்கள். சரியான பதில் தெரியும். தெளிவான வழி புரியும்!

நாம் நினைத்திருக்கும் விஷயம் தவறாக இருக்கலாம் என்று மாற்று சிந்தனை கொண்டு சிந்திக்கத் தயங்காதீர்கள். பீட்டர் வாசன் ஆய்வில் ஒரு மாணவன் மட்டும் சரியான விடையளித்தான். தான் நினைத்த விதி தவறாக இருக்கலாம் என்று புதிய கோணத்தில் சிந்தித்தான்.

‘அடுத்த எண் ஏழாக இருக்கலாமா’ என்று கேட்டான். ‘விதிப்படி இருக்கலாம்’ என்றார் பீட்டர். ‘அடுத்த எண் பதிமூன்றாக இருக்கலாமா’ என்றான். ‘விதிப்படி இருக்கலாம்’ என்றார் பீட்டர். ‘அடுத்த எண் மூன்றாக இருக்கலாமா’ என்று கேட்டான். ‘விதிப்படி முடியாது’ என்றார் பீட்டர்.

’அடுத்த எண் முந்தைய எண்ணை விட அதிகமாக இருக்கவேண்டும் என்பதே விதி’ என்றான் மாணவன். பீட்டர் புன்னகைத்து ‘அதுவே’ என்றார்!

வடக்குப்பட்டி ராமசாமி கதை நேராமல் இருக்கும் வழி புரிகிறதா!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x