

மூன்று நாள் சரிவுக்கு பிறகு சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது. அந்நிய முதலீடு மற்றும் சர்வதேச சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தையின் ஏற்றத்துக்குக் காரணமாகும்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை என்று அறிவித்ததால் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் மற்ற முன்னணி பங்குச்சந்தைகளும் உயர்ந்து முடிந்தன. இதனால் டாலர் மதிப்பு சரிந்தது.மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
ரூபாய் மதிப்பு உயர்வு
அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவு காரணமாக டாலர் மதிப்பு சரிந்து ரூபாய் மதிப்பு உயர்ந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே 49 பைசா உயர்ந்து ஒரு டாலர் 60.92 ரூபாய் வரை சென்றது. வர்த்தகத்தின் இடையே 34 பைசா உயர்ந்து ஒரு டாலர் 61.06 ரூபாயாக இருந்தது. புதன் கிழமை வர்த்தகத்தின் ஒரு டாலர் 61.13 ரூபாயில் முடிவடைந்தது.
390 புள்ளிகள் உயர்வு
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 26637 புள்ளியிலும், நிப்டி 118 புள்ளிகள் உயர்ந்து 7961 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 2 சதவீத அளவுக்கு உயர்ந்து முடிவடைந்தன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 417 புள்ளிகளும், நிப்டி 125 புள்ளிகளும் உயர்ந்தன்.
அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்து முடிவடைந்தன. குறிப்பாக கேபிடல் குட்ஸ், ரியால்டி, வங்கி குறியீடுகள் 3 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் பி.ஹெச்.இ.எல்., ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ., எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் அதிகம் உயர்ந்து முடிவடைந்தன. சென்செக்ஸ் பட்டியலில் இருக்கும் 30 பங்குகளில் 26 பங்குகள் உயர்ந்துமுடிவடைந்தன.
புதன்கிழமை ரூ.1,440 கோடி அளவுக்கு பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து விற்றிருக்கிறார்கள்.