

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று, அந்நிய செலாவணி சந்தையில் காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுகள் குறைந்து 63.07 என்ற நிலையில் வர்த்தகமாகியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது, இந்திய ரூபாய் மதிப்பு 62.47 என்ற நிலையில் இருந்தது.
இந்நிலையில் இன்று பல நாட்களுக்குப் பிறகு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மீண்டும் 63-ரூபாய் என்ற அளவாக குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இறக்குமதியாளர்கள் மத்தியில், டாலர் தேவை அதிகரித்துள்ளதே ரூபாய் மதிப்பு குறைய காரணம் என கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் சரிவு: இன்று காலையில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 174.88 புள்ளிகள் குறைந்து 20491.27 என்ற நிலையிலும் நிஃப்டி 26.05 புள்ளிகள் குறைந்து 6114.70 புள்ளிகள் என்ற நிலையிலும் தொடங்கியது.