

தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்தார். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும் என்று அவர் கூறினார்.
ஆறு நாள் பயணமாக ஜப்பான் சென்றிருக்கும் அவர் இன்ஸ்டியூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியிருப்பதாவது.
தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல் இருக்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 189 நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சீனா 84-ம் இடத்தில் இருக்கிறது.
இந்திய அரசு தொழில்புரி வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கு வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்த ஒரிரு ஆண்டுகளில் இந்த பட்டியலில் இந்தியா பல படிகள் முன்னேறும்.
நேரடி வரி விகிதத்தை பொறுத்த வரை முக்கிய சீர்திருத்தங்கள் வர இருக்கின்றது. கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இனி முன் தேதியிட்ட வரி இந்தியாவில் இருக்காது.
இந்தியாவில் முதலீடு செய்ய உள்ள ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு நான் சொல்லும் ஒரு ஆலோசனை பொறுமையாக இருங்கள், அதற்குரிய வெகுமதி நிச்சயம் இந்தியாவில் கிடைக்கும்
ஜப்பானின் புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இந்தியாவின் மனிதவளத்துடன் இணையும் போது பெரிய அளவில் சாதகமாக இருக்கும். இந்தியாவின் தனிநபர் வருமானம் அடுத்த பத்தாண்டுகளில் மிக வேகமாக அதிகரிக்கும். தனிநபர் வருமானம் அதிகரிக்கும் போது வாங்கும் சக்தி அதிகரிக்கும். இந்தியாவில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு இதுதான் சரியான நேரம். இந்தியாவில் முதலீடு செய்வது எளிது. உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலில் உள்ளது. இப்போது முதலீடு செய்யாவிட்டால் நிறுவனங்கள் மிகப்பெரிய வாய்ப்பை இழக்க வேண்டி இருக்கும் என்று அருண் ஜேட்லி கூறினார்.