வெங்காய விலை 3 வாரங்களுக்கு குறையாது: சரத் பவார்

வெங்காய விலை 3 வாரங்களுக்கு குறையாது: சரத் பவார்
Updated on
1 min read

நாட்டில் வெங்காய விலை அடுத்த 2 முதல் 3 வாரங்கள் வரை தொடர்ந்து அதிகரித்தே காணப்படும் என்று வேளாண் அமைச்சர் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது. டெல்லியில் தரத்துக்கு ஏற்ப கிலோவுக்கு ரூ. 90 முதல் 100 வரை கொடுத்து வெங்காயம் வாங்க வேண்டியுள்ளது. நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.70 முதல் 90 வரை விற்கப்படுகிறது.

'கடந்த 3 மாதங்களாகவே வெங்காய விலை உயர்ந்து காணப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு பலன் ஏற்படவில்லை. ஆகஸ்ட்டில் ஒரு டன் வெங்காயத்தின் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை 650 டாலர் என நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பரில் 900 டாலராக உயர்த்தப்பட்டது. கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நிகழ் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் வெங்காய ஏற்றுமதி அளவு 28 சதவீதம் குறைந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 246 டன்னாக இருந்தது.

இந்த மாதம் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த வேளையில் காலம் தவறி பெய்த மழையால் பயிர் சேதம் அடைந்தது. அறுவடையும் தாமதமாகி உள்ளது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கரநாடகத்தில் காலம் தவறி மழை பெய்ததால் வெங்காய பயிர்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகிவிட்டது' என்று நாசிக்கில் உள்ள என்எச்ஆர்டிஎப் (தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை கூட்டமைப்பு) இயக்குநர் ஆர்.பி.குப்தா தெரிவித்துள்ளார்.

அரசின் நடவடிக்கை?

வெங்காய விலையேற்றம் குறித்து மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரிடம் பெங்களூரில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அடுத்த இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் வரை கடினமாக போக்குதான் நீடிக்கும். உரிய தீர்வு காணப்பட வேண்டியுள்ளது” என்றார்.

அப்படியென்றால், அடுத்த மூன்று வாரங்களுக்குள் விலை குறையுமா? என்றதற்கு “இல்லை. இல்லை... நான் ஒன்றும் ஜோதிடர் கிடையாது. ஆனால், அறுவடைகள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். என்னுடைய கணிப்பின்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும்” என்றார் சரத் பவார்.

மேலும், நாட்டின் பற்றாக்குறையைப் போக்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 லட்சம் டன் வெங்காயம் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது பாதி அளவுதான் கிடைக்கிறது. இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் காலியாகிவிட்டது. கடந்த ஆண்டில் இந்தியாவில் 16.3 லட்சம் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தலும் வெங்காயமும்

டெல்லியில் டிசம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காய விலை கடுமையாக அதிகரித்திருப்பது அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in