

பஜாஜ் இரு சக்கர வாகன நிறுவனத்தின் சார்பில் அதிக மைலேஜ் திறன் கொண்ட புதிய இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
“டிஸ்கவர் 100 எம்” என்ற பெயரில் 100 சி.சி திறன் கொண்ட புது இருசக்கர வாகனத்தை பஜாஜ் நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவின் தலைவர் கே.நிவாஸ் அறிமுகம் செய்துவைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த வாகனத்தில், மற்ற இருசக்கர வாகனங்களில் இல்லாத அளவில் நான்கு வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 84 கிலோமீட்டர் தரக்கூடியது மேலும் எலக்ட்ரிக் ஸ்டார்ட், காற்று நிரப்பப்பட்ட நைட்ராக்ஸ் சஸ்பென்ஷன், உயர் வகை அலுமினியத்தால் செய்யப்பட்ட பக்கவாட்டு அமைப்புகளைக் கொண்டது என்றார்.
தற்போது வரை 12,000 வாகனங்கள் விற்றுள்ளதாகவும் அடுத்த மாதத்துக்குள் இந்த எண்ணிக்கை 32,000 வரை உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகன பிரிவின் தென்மண்டல அமைப்பு பொதுச் செயலாளர் அஸ்வின் ஜெய்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.