

டிசம்பர் காலாண்டு ஜிடிபி புள்ளி விவரங்கள் பங்குச் சந்தையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நேற்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 241 புள்ளிகள் ஏற்றம் கண்டது. ஆறு மாதங்களில் இல்லாத வகையில் சென்செக்ஸ் 28,984 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 8,945 புள்ளிகள் முடிவடைந்துள்ளது.
மத்திய புள்ளி விவரத்துறை செவ்வாய்கிழமை வெளியிட்ட ஜிடிபி விவரங்களில் டிசம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதம் என்று குறிப்பிட்டிருந்தது. பணமதிப்பு நீக்கம் காரணமாக எழுந்த பொருளாதார தேக்கத்தினால் வளர்ச்சி சரியும் என எதிர்பார்த்த நிலையில் ஜிடிபி சிறப்பான நிலையில் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகத்துக்கு இடையில் 29,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. கடந்த ஆண்டின் செப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு சந்தை 29,000 புள்ளிகளை என்கிற உச்ச அளவை மீண்டும் தொட்டுள்ளது. மேலும் சந்தை 241 புள்ளிகள் ஏற்றத்தையும் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 66 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தகத்துக்கு இடையில் 8,960 புள்ளிகள் வரை தொட்டது.
இந்திய உற்பத்தி துறை குறியீடுகளும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக வளர்ச்சியை கண்டு வருகிறது. தவிர அமெரிக்க அதிபரின் குடியுரிமைக் கொள்கைகளில் மறு பரிசீலனை குறித்த பேச்சுகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் எண்ணெய் எரிவாயு மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறை சரிவைக் கண்டிருந்தன. வங்கித்துறை பங்குகளின் ஏற்றம் முன்னிலையில் இருந்தன. டாடா ஸ்டீல் பங்கு 3.66 சதவீத லாபத்தையும், எம் அண்ட் எம் பங்கு 2.79 சதவீத லாபத்தையும் சந்தித்தன. ஐடிசி, சன்பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.
ஐடியா செல்லுலார் பங்கு 2.24 சதவீதம் சரிந்தது. கெயில் பங்கு 2.04 சதவீதமும், எம் டி பிசி பங்கு 1.84 சதவீதமும் சரிந்தன. மேலும் பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, லுபின், விப்ரோ பங்குகள் சரிவில் வர்த்தகமாயின.