Last Updated : 03 Feb, 2014 11:25 AM

 

Published : 03 Feb 2014 11:25 AM
Last Updated : 03 Feb 2014 11:25 AM

லாபம் தரும் லார்ஜ் கேப் ஃபண்ட்!

சென்றவாரம் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள பல்வேறு வகைகளைப் பற்றிக் கண்டறிந்தோம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதன் முதலாக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் அடி எடுத்து வைக்கும் பொழுது லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சாலச் சிறந்தது. காரணம் இவ்வகையான ஃபண்டுகள் தங்களது முதலீட்டை இந்தியாவில் உள்ள டாப் 50 அல்லது 100 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கின்றன.

அவ்வாறு முதலீடு செய்யும் பொழுது மிகவும் தரமான பங்குகளில் முதலீடு செய்வதால் ரிஸ்க் குறைந்து விடுகிறது. இவ்வகை ஃபண்டுகளின் வருவாயும் சந்தைக் குறியீட்டை ஒட்டியே இருக்கும். பங்குச் சந்தை வீழ்ச்சியைக் காணும் பொழுது இவ்வகை திட்டங்கள் சந்தையை ஒட்டியே குறையும். மேலும் நீண்ட நாள் முதலீட்டிற்கு லார்ஜ் கேப் திட்டங்கள் ஸ்திரமாக நிற்கும். ஏனென்றால் அந்த ஃபண்டு வைத்துள்ள நிறுவனங்கள் ஸ்திரமானவை.

லார்ஜ் கேப் வகை ஃபண்டுகளை பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இவற்றில் நல்ல திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது முக்கியமாகும். நல்ல திட்டங்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழும். சில சாதாரண வடிகட்டிகளைப் போட்டாலே உங்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்துவிடும். உதாரணத்திற்கு நீங்கள் முதலீடு செய்யப்போகும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்தின் மதிப்பு டாப் 20-ல் உள்ளதா என்று பாருங்கள்.

அவ்வாறு நிறுவனத்தை தேர்ந்தெடுத்த பிறகு, அந்நிறுவனங்களில் உள்ள லார்ஜ் கேப் திட்டங்களை நோட்டமிடுங்கள். அத்திட்டங்கள் நிறுவகிக்கும் சொத்து குறைந்தது 300 கோடியாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு அத்திட்டங்கள் குைறந்தபட்சமாக 5 ஆண்டுகளாவது நடைமுறையில் இருந்துள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் வடிகட்டிய திட்டத்தின் கடந்த 1, 3, 5, 10 வருட வருமானத்தை பங்கு சந்தை குறியீட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் நன்றாக வருமானத்தை தந்துள்ள திட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள்.

நாம் மேற்கூறிய வடிகட்டிகளை எல்லாம் உங்களுக்கு போட்டுப் பார்க்க நேரம் இல்லையெனில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஃபண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து கொள்ளுங்கள்.

கீழ்க்கண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பொழுது பொதுவாக மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ரெக்கரிங் டெபாசிட் போல தொடர்ந்து முதலீடு செய்து வருவது நல்லது. இதை எஸ்.ஐ.பி (SIP Systematic Investment Plan) முதலீட்டு முறை என்று கூறுகிறோம். இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது பல்வேறு தினங்களில் நாம் யூனிட்டுகளை வாங்குவதால், விலை சராசரியாகி (Average) ரிஸ்க் வெகுவாக குறைந்து விடுகிறது. ரெக்கரிங் டெபாசிட்டை போல இவ்வித முதலீட்டுகளில் கேரண்டியான வருமானம் கிடையாது.

ஆனால் 5, 10, 15, 20 வருட காலங்களுக்கு முதலீடு செய்து வரும் பொழுது ரெக்கரிங் டெபாசிட்டில் கிடைக்கும் வருமானத்தை போல பன்மடங்கு வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரம்ப காலங்களில் சிறிதளவு பேப்பர் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்க.

இது போன்ற எஸ்.ஐ.பி முதலீடுகளில் உள்ள பெரிய செளகரியம் என்னவென்றால் உங்களால் பணம் செலுத்த முடியாத பொழுது ஒருமாத நோட்டிசில் மேலும் செலுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம். போட்ட/ போட்டிருக்கும் முதலீடுகளை அவசரத் தேவை ஏற்படும் பொழுது வேண்டுமென்றால் 3 நாட்களில் அன்றைய மார்க்கெட் மதிப்பில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இன்ஷூரன்ஸ் பாலிசியைப்போல பெனால்ட்டி எதுவும் கிடையாது அல்லது கட்டாயம் கட்டியே ஆகவேண்டும் என்ற வற்புறுத்தலும் கிடையாது.

தெரியாமல் மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று பயப்படவும் வேண்டாம். கடந்த 12 மாதத்திற்குள் முதலீடு செய்த பணத்தை எடுத்தீர்களேயானால் அன்றைய மார்க்கெட் மதிப்பில் 1% வெளியேற்றுக்கட்டணத்தை எடுத்துக்கொள்வார்கள். மற்றும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இது போன்ற மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு மெச்சூரிட்டி தேதி என்று எதுவும் கிடையாது. எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் நீங்கள் முதலீட்டை தொடர்ந்து கொள்ளலாம்.

நாம் ஏற்கெனவே கண்டது போல வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கும் 12 மாதத்திற்கு மேலான முதலீட்டு லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதேபோல என்.ஆர்.ஈ கணக்குகள் மூலம் முதலீடு செய்யும் போது தாங்கள் வாழும் நாட்டிற்கு எப்பொழுது வேண்டுமானாலும் பணத்தை திருப்பி எடுத்துச் செல்லலாம். இனி வரும் வாரத்தில் மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள் குறித்தும் கலப்பினத் திட்டங்கள் குறித்தும் பார்ப்போம்.

www.prakala.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x