

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ மாடல் காரில் ட்விஸ்ட் எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 2.36 லட்சமாகும்.
புதிய ரக ட்விஸ்ட் மாடலில் பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. பெருநகரில் நிலவும் வாகன நெரிசலில் சௌகர்யமான பயணத்தை அளிக்கும் வகையில் இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ள மின்சாரத்தில் இயங்கும் பவர் ஸ்டீரிங் சிஸ்டம் கார் ஓட்டுவதை எளிதாக்கியுள்ளது என்று பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ரஞ்ஜித் யாதவ் தெரிவித்தார்.
நானோ மாடலில் தொடர்ந்து புதிய புதிய மாடல்களைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய மாடல்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அழகிய, கண்கவர் வண்ணங்களில், சிறந்த வடிவமைப்புடன் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன.
புதிய நானோ மாடலில் இபிஏஎஸ் எனப்படும் ஸ்டீரிங், 624 சிசி திறன் கொண்ட மல்டி பாய்ன்ட் ஃபியூயல் இன்ஜெக்டெட் 2 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. நான்கு கியர்களைக் கொண்டது. நானோ மாடல் கார்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சோதனை ஓட்டத்தின்போது 25.4 கி.மீ. தூரம் ஓடியதாக யாதவ் தெரிவித்தார்.