தத்தளிக்கும் ரியல் எஸ்டேட் தொழில்

தத்தளிக்கும் ரியல் எஸ்டேட் தொழில்
Updated on
2 min read

பொருளாதார மந்த நிலை காரணமாக பல்வேறு துறைகளில் தேக்க நிலை நிலவி வருகிறது. இதில் கட்டுமானத் தொழில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இத்துறையில் நிலவும் தேக்க நிலை காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள மிகப் பெரும் நிறுவனங்கள்கூட கடுமையான நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது கடன் சுமையைக் குறைக்க வருமானம் வராத சொத்துகளை விற்பனை செய்து வருகின்றன.

ஹெச்டிஐஎல் நிறுவனம் தங்கள் வசம் உள்ள சொத்துகளில் 96 சதவீதத்தை அடமானம் வைத்து அதன் மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டு சமாளித்து வருகின்றனர்.

டிஎல்எப் நிறுவனம் தங்களது சொத்துகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்யத் தொடங்கிவிட்டது. குர்காவ்னில் இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 28 ஏக்கர் நிலத்தை எம்3எம் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. புணேயில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்தை பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. மேலும் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்தையும் இந்நிறுவனம் கைவிட்டுவிட்டது. சொகுசு ஹோட்டல் சங்கிலித் தொடரான அமான் ரிசார்ட்ஸில் தங்களுக்கு உள்ள பங்குகளை விற்று விட்டு வெளியேற நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேக்க நிலை காரணமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தாங்கள் மேற்கொண்ட திட்டங்களை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு வெளியேறுகின்றன.

விற்பனை குறைந்ததால், பணப்புழக்கம் குறைந்து பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான விற்பனை விலையைவிடக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது என்று ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களின் கூட்டமைப்பு (கிரடாய்) தலைவர் லலித் குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

வீடுகளை வாங்குவது குறைந்துள்ள போதிலும் அதிகரித்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலை காரணமாக நிறுவனங்களுக்குக் கிடைக்கும் லாபத்தின் அளவும் குறைந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 1,200 செலவானது. இப்போது ரூ. 1,700 செலவாகிறது. மணல், இரும்பு, சிமென்ட், ஜல்லி, செங்கல் ஆகியவற்றின் விலை 40 சதவீதம் உயர்ந்துவிட்டது. மேலும் தொழிலாளியின் தினசரி கூலி ரூ. 140-லிருந்து ரூ. 200 ஆக உயர்ந்துவிட்டது. ஓரளவு தொழில் தெரிந்தவரின் கூலி ரூ. 400-லிருந்து ரூ. 700 வரை உள்ளது.

இப்போது தொழிலாளிகள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. கிராம மக்கள் இப்போதெல்லாம் நகர்ப்புறங்களுக்கு வருவதில்லை. அதிலும் குறிப்பாக கட்டுமானப் பணிக்கு ஆள் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. கிராமங்களில் இப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நாள் கூலியாக ரூ. 174 கிடைப்பதால் கிராம மக்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து நகரத்துக்கு வந்து கஷ்டப்பட்டு வாழ விரும்புவதில்லை.

மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ள அரசியல்வாதிகள் தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் இத்துறையில் பணப்புழக்கம் குறைந்து, நிறுவனங்கள் நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கின்றன.

கடந்த ஏழு ஆண்டுகளாக பொருளாதாரத்தில் நிலவிவந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in