

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதி ஆண்டிலேயே 8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று அர்விந்த பனகாரியா கருத்து தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் தலைவரான பனகாரியா, பருவ மழை பொழிவு சாதகமாக இருப்பதும், உற்பத்தி துறை வளர்ச்சி வளரும் நிலையில் உள்ளது போன்ற காரணங்களாலும் இந்திய பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டிலேயே 8 சதவீதத்தை தாண்டி வளர்ச்சி அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பான பருவ மழை பொழிவு காரணமாக விவசாயத் துறை 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார். கடந்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் 7.9 சதவீதம் என்கிற வளர்ச்சியை தொட்டுள்ளோம். விவசாயத்துறை மற்றும் உற்பத்தி துறை செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங் கள்படி கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் உற்பத்தி துறை 9.3 சதவீத வளர்ச்சி என்கிற சாதனை அளவை எட்டியுள்ளது. மேலும் விவசாயத் துறையின் வளர்ச்சி 2.3 சதவீதமாக உள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதாரம் வளர்ச்சியடைந்து 2015-16 ஆண்டில் 7.6 சதவீதமாக இருந்தது. இதற்கு உற்பத்தி துறை மற்றும் விவசாயத் துறை முக்கிய காரணமாக அமைந்தது என்றார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை கணிப்பு 7 முதல் 7.75 சதவீதமாக இருக்கும் என்பதும் முக்கியமானது.