

பொதுதுறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய அந்த வங்கிகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திக்க இருக்கிறார். புதுடெல்லியில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பில் ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜனும் கலந்து கொள்வார் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்துறை வங்கித்தலைவர்களுடன் பிரதமர் சந்திப்பது எப்போதாவது நடக்கும் நிகழ்வு. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஒரு முறை கூட பொதுத்துறை வங்கித் தலைவர்களை சந்திக்கவில்லை.
இந்த சந்திப்பில் வாராக் கடன் கள், வாராக் கடன்களை வசூலிப்பது, வாராக் கடன்களை மறு சீரமைப்பு செய்வது, புதிய திட்டங்கள், ஜன்தன் யோஜனா, வட்டி குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் முன்னுரிமை கடன்களான வேளாண் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், சிறு தொழில் கடன் ஆகியவை பொதுத்துறை வங்கிகளில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் விவதிக்கப்படும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் வாராக் கடன் அதிகமாக இருப்பது, பேசல் மூன்று விதிமுறைகளை பின்பற்ற தேவையான நிதி உள்ளிட்ட பிரச்சினைகளை பொதுத்துறை வங்கிகள் சந்திக்கின்றன.